விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராசு தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செங்கோடன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மத்திய அரசின் ஊரக வளர்ச்சி துறை உருவாக்கி உள்ள செயலியை நீக்க வேண்டும், வேலை நேரத்தை காலை 9 மணி என திருத்தி அமைக்க வேண்டும், 100 நாட்கள் வேலை திட்டத்தில் 100 நாட்களும் வேலை வழங்க வேண்டும், 60 வயது நிரம்பிய விவசாய தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாய தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.
இதேபோல் ஆவுடையார் கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் ஜெபமாலை பிச்சை தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் காமாட்சி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்டவர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி பஸ் நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மணி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் திலகர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு மாற்று இடம் ஒதுக்கி பட்டா வழங்க வேண்டும், 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்த வேண்டும், உழவர் பாதுகாப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.