தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயத் தொழிலாளர்களுக்காக தனித்துறையை உருவாக்க கோரி விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாய தொழிலாளர்கள்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தஞ்சை மாவட்ட அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் பிரதீப்ராஜ்குமார் தலைமை தாங்கினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டக்குழு உறுப்பினர் குருசாமி, சி.ஐ.டி.யூ. மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், மாவட்ட துணைச் செயலாளர் அன்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் செந்தில்குமார், மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநிலத்தலைவரும் எம்.எல்.ஏ.வுமான சின்னதுரை, மாநிலக்குழு உறுப்பினர் பக்கிரிசாமி, மாவட்டச் செயலாளர் வாசு, மாவட்ட பொருளாளர் நாகராஜன் ஆகியோர் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினர்.

வேலை வாய்ப்புகள்

ஆர்ப்பாட்டத்தில், விவசாயத்தையே நம்பியுள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கு, விவசாய எந்திரமயமாக்கலால் வேலை வாய்ப்புகள் குறைந்து வருகிறது. இதனால் வேலையில்லாமல் விவசாயத் தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர். எனவே அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தர வேண்டும்.

மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிய விவசாய பெண் கூலித் தொழிலாளர்களை, நிதி நிறுவனத்தினர் மிரட்டும் நடவடிக்கைகளை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய கூலித் தொழிலாளர்களை பாதுகாக்க தமிழ்நாடு அரசு குறைந்தபட்ச கூலியை கேரள அரசைப்போல் கூலி ரூ.600 சட்ட கூலியாக அறிவிக்க வேண்டும்.

தனித்துறை

விவசாயத் தொழிலாளர்களுக்கு கிடைத்து வந்த 100 நாள் வேலையை மத்திய அரசு குறைத்து அதற்கான நிதியையும் குறைத்துள்ளது. இதனால் விவசாயத் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளதால், அதற்கான நிதியை கூடுதலாக்கி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

விலைவாசி உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த வேண்டும். நாட்டில் அதிகம் உள்ள விவசாயத் தொழிலாளர்களின் நலன் பாதுகாக்க அவர்களுக்கான தனித்துறையை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story