குமரியில் வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும்
குமரியில் வேளாண்மை கல்லூாி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
நாகா்கோவில்:
குமரியில் வேளாண்மை கல்லூாி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடந்தது. கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். கூட்டம் தொடங்கியதும் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, கூட்டுறவு இணைப்பதிவாளர் சந்திரசேகர் மற்றும் வேளாண்மை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள் பேசுகையில் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் கும்பப்பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் அறுவடை நடந்து வருகிறது. ஒரு சில இடங்களில் விவசாயத்திற்கு தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே மார்ச் 30-ந் தேதி வரை பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். நெய்யூர் பகுதியில் கட்டப்பட்டுள்ள ரெயில்வே பாலத்தை ஆய்வு செய்து விவசாயிகள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேளாண்மை கல்லூரி
தெங்கம்புதூர் கால்வாயில் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் எட்டாவது மடை அருகே தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டு பகுதியில் இருந்து விளைநிலங்களுக்கு வரும் காட்டுப்பன்றி மற்றும் குரங்குகளால் பயிர்கள் அழிக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருகின்றனர். எனவே காட்டுப்பன்றியை வன விலங்குகள் பட்டியலில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
குமரி மாவட்டத்தில் உள்ள கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். கும்பப்பூ நெல் சாகுபடியின் போது நெல் விதையில் கலப்பினம் இருந்ததால் நெல் பயிர்களில் சில நாட்களுக்கு முன்பாக கதிர் வந்தது. இதனால் விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். குமரி மாவட்டத்தில் விவசாயம் முதன்மை தொழிலாக உள்ளது.
இதனால் குமரி மாவட்டத்தில் வேளாண்மை கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு ஏற்கனவே 105 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. தற்போது பாலமோர் எஸ்டேட்டில் 195 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு கல்லூரி அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மறி வருகின்றன. இதனை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினா்.
இழப்பீடு வழங்க நடவடிக்கை
இதற்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் பதிலளித்து கூறியதாவது:-
பேச்சிப்பாறை அணையில் இருந்து 30-ந் தேதி வரை தண்ணீர் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு தெரிவிக்கப்படும். தெங்கம்புதூர் கால்வாயில் கழிவுகள் கொட்டாமல் இருக்க அங்கு அறிவிப்பு பலகை வைக்கப்படும். காட்டுப்பன்றிகளை வன உயிரின பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பாக வன அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
குமரி மாவட்டத்தில் கும்பப்பூ நெல் சாகுபடியின் போது மகசூல் இழப்பு ஏற்பட்டு இருக்கிறதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் இழப்பு இருந்தால் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். குமரி மாவட்டத்தில் வேளாண்மை கல்லூரி அமைப்பது தொடர்பாக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.