வேளாண்மைதுறை அமைச்சர் ஆய்வு


வேளாண்மைதுறை அமைச்சர் ஆய்வு
x

மணல்மேடு எம்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறப்பது தொடர்பாக வருகிற 30-ந் தேதி வேளாண்மைதுறை அமைச்சர் ஆய்வு செய்கிறார் என்று சட்டமன்ற மதிப்பீட்டுகுழு தலைவர் கூறினார்.

மயிலாடுதுறை


மணல்மேடு எம்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறப்பது தொடர்பாக வருகிற 30-ந் தேதி வேளாண்மைதுறை அமைச்சர் ஆய்வு செய்கிறார் என்று சட்டமன்ற மதிப்பீட்டுகுழு தலைவர் கூறினார்.

ஆய்வு கூட்டம்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டு குழு ஆய்வு கூட்டம் தலைவர் டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. ஆய்வுக்கூட்டத்துக்கு பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-புதிய மாவட்டமான மயிலாடுதுறையில் நடைபெற்று வரும் முக்கிய பணிகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டது. பல பணிகளும் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. ஒருசில குறைபாடுகள் கண்டறியப்பட்டு அந்த குறைகளை போக்க அறிவுரை வழங்கினோம்.மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இங்குள்ள சுத்திகரிப்பு நிலையம் சரியாக செயல்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. எனவே அதற்கான அறிவுரைகள் அலுவலர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய பஸ் நிலையம்

புதிய பஸ் நிலையம் அமைக்க மணக்குடி பகுதியில் நிலம் எடுக்கப்பட்டு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதில் ஒரு சில சிக்கல்கள் உள்ளதால், அதை தீர்க்க பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. பிரச்சினைகள் இல்லாத இடங்கள் கிடைக்கும் பட்சத்தில் பஸ் நிலைய பணிகள் முழு வீச்சில் தொடங்கப்படும். சுமார் 15 வருடங்களாக கிடப்பில் இருந்து வந்த திருமுல்லைவாசல் பாலம் கட்டும் பணி தற்போது ரூ.25 கோடியில் செயல்படுத்தப்பட்டு நடைபெற்று வருகிறது. . இப்பாலத்தின் பணி 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிவுற்று மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மூவலூர் பாலம் ரூ. 4.5 கோடி மதிப்பில் பணிகள் துரிதமாக நடைப்பெற்று வருகின்றன.

சர்க்கரை ஆலை

என்.பி.கே.ஆர்.ஆர். சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இந்த சர்க்கரை ஆலையை மீண்டும் திறப்பதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையை திறப்பது தொடர்பாக வருகிற 30-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) வேளாண்மைதுறை அமைச்சர் இங்கு வந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார். தரங்கம்பாடியில் மீனவர்கள் மீன்பிடி இறங்குதளம் கேட்டு கோரிக்கை வைத்துள்ளனர். இக்கோரிக்கை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். தரங்கம்பாடியில் டேனிஷ் கோட்டைக்கு சென்றோம். அங்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க தடுப்பு சுவர் அமைப்பதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.

சுற்றுலா மையம்

பூம்புகார் சுற்றுலா மையத்துக்கு ரூ.36 கோடி ஒதுக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. எருக்கூர் நவீன அரிசி ஆலை ரூ.64 கோடியில் தரம் உயர்த்தப்பட்டு ஆலை இயங்கி வருகிறது. இந்த நவீன அரிசி ஆலையை முழுமையான பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினாா். அப்போது மாவட்ட கலெக்டர் லலிதா, எம். எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூடுதல் செயலாளர் சுப்பிரமணியம் ஆகியோர் இருந்தனர்.


Next Story