சாலை விபத்தில் வேளாண்மை அதிகாரி பலி
நெல்லை அருகே சாலை விபத்தில் வேளாண்மை அதிகாரி பலியானார்.
நெல்லை:
நெல்லை அருகே நடந்த சாலை விபத்தில் வேளாண்மை அதிகாரி பலியானார்.
வேளாண்மை அதிகாரி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்தவர் லூர்து ராயப்பன் (வயது 52). இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண்மை உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று அதிகாலையில் புதுக்கோட்டையில் இருந்து சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டு வந்து கொண்டு இருந்தார். புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த டிரைவர் விமல் என்பவர் காரை ஓட்டினார். நெல்லை அருகே மதுரை-நாகர்கோவில் நாற்கர சாலையில் ரெட்டியார்பட்டி மலை பகுதியில் கார் வந்து கொண்டு இருந்தது.
விபத்தில் பலி
அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் லூர்து ராயப்பன் படுகாயம் அடைந்தார். விமலுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் லூர்து ராயப்பன் இறந்தார்.
இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.