வேளாண் சங்கமம் திருவிழா - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
திருச்சியில் வேளாண் சங்கமம் திருவிழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை,
வேளாண்மைத்துறை சார்பில் வேளாண் வணிகத் திருவிழா சென்னையில் கடந்த 8-ந் தேதி நடந்தது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்திருந்தார். மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள் உற்பத்தி செய்த பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட விளைபொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, திருச்சி கேர் என்ஜினீயரிங் கல்லூரியில் வேளாண் சங்கமம் விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வைத்தார். இந்த விழா 29-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான இன்று முதல்-அமைச்சர் வேளாண் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து, பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகளை வழங்கினார்.
வேளாண்மை, தோட்டக்கலை தொடர்பான புதிய தொழில்நுட்பங்கள், அரசின் திட்ட உதவிகள், பழக்கன்றுகள், காய்கறி விதைகள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டு இந்த சங்கமம் நடக்க உள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களின் புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்த உள்ளார்கள். இந்த சங்கமம் மூலம் அரசின் அனைத்து திட்டங்களையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
கண்காட்சியுடன், விவசாயிகள் வாங்கிச்சென்று தங்கள் பண்ணையில் சாகுபடி செய்வதற்கேற்றவாறு, புதிய ரகங்களின் காய்கறி விதைகள், மா, கொய்யா உள்ளிட்ட பழ வகைகளில் ஒட்டு ரகக் கன்றுகள், தென்னையில் வீரிய ஒட்டுக் கன்றுகள், நுண்ணூட்டக்கலவை உரங்கள், உயிர் உரங்கள், விதைகள் போன்ற இடுபொருட்களும் விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.