100 நாள் வேலை திட்டத்தை பயன்படுத்தினால் விவசாயம் பெருகும்
100 நாள் வேலை திட்டத்தை பயன்படுத்தினால் விவசாயம் பெருகும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேசினார்.
திருப்பத்தூர்
100 நாள் வேலை திட்டத்தை பயன்படுத்தினால் விவசாயம் பெருகும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேசினார்.
நிர்வாகக்குழு கூட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி திருப்பத்தூர் மாவட்ட நிர்வாக குழு மற்றும் மாவட்ட குழு கூட்டம் திருப்பத்தூர் ெரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் எம்.சுந்தரேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சாமிக்கண்ணு வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ. லதா முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் இரா. முத்தரசன் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது:-
விவசாயம் பெருகும்
மக்கள் பிரச்சினைக்காக போராடும் ஒரே இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான். தேர்தல் நேரத்தில் தி.மு.க. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்கள். 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி கொடுக்க வேண்டும், அவர்களுக்கு வழங்கப்படும் தொகையை 500 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி வருகிறது. 100 நாள் வேலை திட்டத்தை விவசாயத்திற்கு பயன்படுத்தினால் நாட்டில் விவசாயம் பெருகும். நீர்நிலை புறம்போக்குகளை முழுமையாக கணக்கு எடுத்து அங்கு வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்க ஆவன செய்ய வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் தான் உள்ளது. ஜூலை 19, 20 தேதிகளில் ஒருங்கிணைந்த மாவட்ட மாநாடு திருப்பத்தூரில் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நான்கு வழிச்சாலை பணிகள்
கூட்டத்தில் மாநில துணைச்செயலாளர் வீரபாண்டியன், மாவட்ட துணை செயலாளர் எம்.நந்தி, எஸ்.ஆர்.தேவதாஸ், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆர்.முல்லை, கே.பி.மணி, கவிதா, சரோஜா, உள்பட பலர் பேசினார்கள்.
கூட்டத்தில் வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் வழியாக சேலம் செல்லும் நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும், கோவில் பகுதிகளில் வசித்து வரும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.