பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தர்மபுரி உழவர் சந்தையில் 50 டன் காய்கறிகள் விற்பனை-மொச்சை அவரை ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தர்மபுரி உழவர் சந்தையில் 50 டன் காய்கறிகள் விற்பனை-மொச்சை அவரை ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை
x

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தர்மபுரி உழவர் சந்தையில் 50 டன் காய்கறிகள் விற்பனையானது. மொச்சை அவரை ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தர்மபுரி

காய்கறிகள் விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று காய்கறிகள் விற்பனை படு ஜோராக நடைபெற்றது. அதிகாலை முதல் மதியம் 12 மணி வரை காய்கறிகள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

பொங்கல் பண்டிகைக்கு தேவையான செங்கரும்பு, மஞ்சள் குலை, சர்க்கரை பூசணி, வாழை இலை, தேங்காய், வாழைப்பழம் ஆகியவை வாங்க பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.

வழக்கமாக தினமும் 5 ஆயிரம் பொதுமக்கள், 100 விவசாயிகள் தர்மபுரி உழவர் சந்தைக்கு வருவார்கள். சுமார் 30 டன் காய்கறிகள் விற்பனையாகும். இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.

ஆனால் நேற்று ஒரே நாளில் மட்டும் 50 டன் காய்கறிகள் விற்பனையானது. இவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும். 132 விவசாயிகளும், பொதுமக்கள் 9 ஆயிரத்து 200 பேரும் நேற்று வந்தனர்.

மொச்சை அவரை

பொங்கல் பண்டிகைக்கு முக்கிய தேவையான மொச்சை, அவரை விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த மொச்சை அவரை ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனையானது. சுமார் ஒரு டன் மொச்சை அவரை நேற்று மட்டும் ஒரே நாளில் விற்பனையானது. இதேபோன்று செங்கரும்பு ஒரு ஜோடி ரூ.70 முதல் ரூ.80 வரையிலும், மஞ்சள் கொம்பு ஒரு ஜோடி ரூ.40 முதல் ரூ.45 வரையிலும் விற்பனையானது. இதேபோல் வாழைப்பழம் ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனையானது.

இதேபோன்று நேற்று மாலை நேர உழவர் சந்தையிலும் பொங்கல் பொருட்கள் விற்பனை வழக்கம் போல் நடைபெற்றது. அப்போதும் ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர். தொடர்ந்து பொங்கல் பண்டிகை நாட்களில் பொது மக்களுக்கு தேவையான அனைத்து காய்கறிகளும் விற்பனை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று உழவர் சந்தை நிர்வாக அலுவலர் இளங்கோவன் தெரிவித்தார்.Ahead of Pongal festival, 50 tonnes of vegetables are sold at Dharmapuri


Next Story