கசியும் ரகசியங்கள் செல்போனுக்கு தடைவிதித்த அ.தி.மு.க. கோபத்தில் முன்னாள் எம்.பி


கசியும் ரகசியங்கள் செல்போனுக்கு தடைவிதித்த அ.தி.மு.க. கோபத்தில்  முன்னாள் எம்.பி
x

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை

அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வரும் 23-ந் தேதி சென்னையில் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்து உள்ளனர்.

23ம் தேதி இந்த கூட்டம் நடக்க உள்ள நிலையில், அதை குறித்து இன்று ஆலோசனை நடத்த மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் அ.தி.மு.க.வின் அவை தலைவரை தேர்வு செய்யவது, பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள், ஜனாதிபதி தேர்தல் ஆகியவை குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைத்து மாவட்ட செயலாளர்கள் என சுமார் நூறுக்கும் அதிகமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெறக் கூடிய எந்த ஒரு ஆலோசனைக் கூட்டம் ஆனாலும் சரி வாக்குவாதங்கள், காரசார விவாதங்களும் நடைபெறுவது வழக்கமான ஒன்றுதான். அவ்வாறு நடைபெறக்கூடிய ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்படும் உட்கட்சி பிரச்சினைகள், கட்சி சார்ந்த ரகசியங்கள் கடந்த சில மாதங்களாகவே வெளியே கசிந்து வருகிறது. இந்த தகவல் எவ்வாறு கசிகிறது என்பதை ஆராய்ந்த அ.தி.மு.க. கூட்டத்தில் பங்கேற்கும் சிலர் செல்போனை ஆன் செய்து வைத்திருப்பதாகவும், அதன் மூலம் வெளியே இருக்கும் சிலர் ஒட்டு கேட்பதாகவும் தெரியவந்திருக்கிறது. ஒருங்கிணைப்பாளர்களுக்கு இடையேயும், கட்சி நிர்வாகிகளுக்கு இடையும் எழும் விவாதங்களும் அச்சுமாறாமல் உடனுக்குடன் மீடியாக்களில் வருவதால் அ.தி.மு.க. தலைமை அதிர்ச்சியடைந்திருக்கிறது.

குறிப்பாக சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ.க.வை விமர்சித்து பொன்னையன் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதோடு, அ.தி.மு.க. பா.ஜ.க. இடையிலான உறவுக்கும் விரிசலை ஏற்படுத்தியது. அதன் காரணமாக மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் உட்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் வரை யாருக்கும் செல்போன் எடுத்துவர அனுமதியில்லை என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. இன்றைய தினம் அ.தி.மு.க. கூட்டத்தில் பங்கேற்க வந்த முன்னாள் எம்.பி. மைத்திரேயன், செல்போனை எடுத்துச் செல்ல அனுமதி மறுத்ததால் கோபத்துடன் கூட்டத்தை புறக்கணித்து திரும்பிச் சென்றார்

பொதுவாக அ.தி.மு.க. செயற்குழு,பொதுக்குழு போன்ற முக்கியமான நிகழ்வுகளில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுவது வழக்கமான ஒன்று தான் என்றாலும், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கே இந்த முறை தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலரால் கசியும் தகவலால் ஒட்டுமொத்த நிர்வாகிகளுக்கும் செல்போன் எடுத்துச் செல்ல தடைவிதிக்கப்பட்டிருப்பது மூத்த நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக கட்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கும் தங்களுக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிப்பது சரியானதல்ல என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தின உள்ளனர்.


Next Story