தமிழகம் முழுவதும் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு சுற்றுப்பயணம்


தமிழகம் முழுவதும் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு சுற்றுப்பயணம்
x

பிப்ரவரி 5 முதல் 10-ம் தேதி வரை அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

18-வது நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு தேர்தல் என்றாலும், மக்கள் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை, எதிர்கால நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை உள்ளடக்கியதாக கழகத்தின் தேர்தல் அறிக்கைகள் இருந்திருக்கின்றன.

அதுபோன்றே, சமீப காலங்களில் ஏற்பட்டுள்ள சமூக அரசியல், பொருளாதார மாற்றங்களை கணக்கில் எடுத்து தமிழ்நாட்டின் நலனை முன்னிலைப்படுத்துவதும், இந்திய சமூக அரசியல் முன்னேற்றத்திற்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்குவதுமான ஒரு தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பொருட்டு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை சென்னை, சேலம், வேலூர், விழுப்புரம், நெல்லை, திருச்சி, கோவை, தஞ்சாவூர், மதுரை ஆகிய 9 மண்டலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து தரவுகளை சேகரித்து ஆகச் சிறந்த தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது.

மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் தங்களுக்குள் கலந்து ஆலோசித்து, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் சம்பந்தப்பட்ட மண்டலங்களுக்கு வருகை தந்து பொதுமக்களின் கருத்துகளைப் பெறும் வகையில், அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்திட வேண்டும் என்றும், கூட்டம் நடைபெறுவதற்கான மண்டபத்தை, சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர் முன்பதிவு செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

தேர்தல் அறிக்கை குழுவினர் வரும்போது, மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்களும், நிர்வாகிகளும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நெசவாளர்கள், மோட்டார் தொழிலாளர்கள், மீனவர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், பொதுநலச் சங்கங்கள், அமைப்புகள், மகளிர், மாணவர்கள், தொழில் முதலீட்டாளர்கள், சிறு, குறு தொழில் முதலீட்டாளர்கள், பொதுநலன் சார்ந்த அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களிடமும், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய அரசிடமிருந்து அவர்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள் எவை எவை என்று, நேரடியாக அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்து வந்தோ அல்லது அவர்களிடம் தரவுகளைப் பெற்று வந்தோ குழுவினரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story