அதிமுக பொதுக்குழு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் பதில் மனு தாக்கல்


அதிமுக பொதுக்குழு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் பதில் மனு தாக்கல்
x

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை,

எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய அதிமுக பொதுக்குழு செல்லாது என்று ஓ.பன்னீர் செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை வரும் 12 ஆம் தேதி(நாளை மறுநாள்) மீண்டும் நடைபெற உள்ளது.

பொது குழு விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி நேற்று கூடுதல் மனு தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், "அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பற்றி முடிவு இன்னும் எட்டப்படாத சூழலில் தேர்தல் ஆணையத்தை எப்படி சேர்க்க முடியும். அதிமுகவை பிரதிநிதித்துவப் படுத்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிகாரம் இல்லை.

எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்காமலேயே இடைக்கால உத்தரவை பிறப்பிக்க கோருவது ஏற்றக்கொள்ள முடியாது.

மேலும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் விருப்பத்திற்கு மாறாக பொதுக்குழு உறுப்பினர்களின் செயல்பாடுகள் இருக்க கூடாது. அதிமுகவை சட்டவிரோதமாக கைப்பற்ற திட்டமிட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, கட்சியின் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு பிறபித்த இடைக்கால உத்தரவால் விரக்தியடைந்து உள்ளார்.

இதனால் சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால உத்தரவை மீறி எடப்பாடி பழனிச்சாமி அவசரம் காட்டுகிறார். எனவே, எடப்பாடி பழனிச்சாமியின் கூடுதல் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story