அ.தி.மு.க. ஒன்று சேர்வதை தி.மு.க. விரும்பாது
அ.தி.மு.க. ஒன்று சேர்வதை தி.மு.க. விரும்பாது. அப்படியே இருக்கட்டும் என்று நினைக்கிறார்கள் என்று சசிகலா கூறினார்.
திண்டிவனம்:
திண்டிவனத்தில் சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் அராஜகம்
எங்களை சிலர் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தக்கூடாது என்கிறார்கள். தானம் கொடுத்த பசுமாட்டின் பல்லை பிடித்து பார்த்தான் என்று சொல்வார்கள். அ.தி.மு.க. கொடியை கட்டக்கூடாது என்பவர்கள், மறைமுகமாக தி.மு.க.விற்கு உதவியாக இருப்பவர்களாக இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர். மறைவிற்கு பின் ஏற்பட்ட நிலைதான் தற்போது உள்ளது.
கடந்தகால ஆட்சியில் கரை வேட்டி கட்டியவர்களால் நல்ல நிர்வாகத்தை தரமுடியவில்லை. கட்சி வேறு, ஆட்சி வேறு. தி.மு.க. ஆட்சியில் அராஜகம் அதிகமாகி உள்ளது. இதை யாரும் தட்டி கேட்க முடியாத நிலை விட்டது.. இந்த பாதிப்பு வாக்களித்த மக்களுக்குத்தான்.
அ.தி.மு.க. சேர்வதை...
சென்னை விரிவாக்கம் என்பது ஜெயலலிதா கொண்டுவந்த திட்டமாகும். ஜெயலலிதா ஆட்சியில் ஒரு கமிஷனர் இருந்தார். துணை கமிஷனர்கள் பலர் இருந்தனர். தற்போது மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. இது குற்றவாளிகளுக்கு சாதகமாக அமையும். ஒரு பகுதியில் குற்றத்தை இழைத்துவிட்டு அடுத்த பகுதிக்கு சென்றுவிடுவார்கள். தவறுகள் நடக்காமல் இருக்க ஒரு கமிஷனர் தலைமையில் தான் செயல்பட வேண்டும். அப்போதுதான் விரைவாக செயல்பட முடியும்.
தற்போது தி.மு.க.வினர் புது கதைவிடுகிறார்கள். திராவிட மாடல் என்கிறார்கள். அது எனக்கு புரியவில்லை. அவர்களுக்கும் புரியவில்லை என்று நினைக்கிறேன். ஏற்கனவே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா திராவிட மாடல் ஆட்சி செய்துவிட்டார்கள். தி.மு.க.வினர் புதுசாவா செய்து விடப்போகிறார்கள்.
அ.தி.மு.க. ஒன்று சேர்வதை தி.மு.க. விரும்பாது. அ.தி.மு.க. அப்படியே இருக்கட்டும் என்று தி.மு.க.வினர் நினைக்கிறார்கள். இது தி.மு.க.வுக்குத்தான் பயன் தரும். இதை நிச்சயமாக நான் சரிசெய்வேன். அந்த தைரியம் எனக்கு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.