பாஜகவுக்கு கூடுவது காக்கா கூட்டம்- செல்லூர் ராஜூ கடும் தாக்கு
அதிமுக தான் எதிர்க்கட்சியாக எப்போதும் செயல்பட்டு வருவதாக முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை,
அதிமுக தான் எதிர்க்கட்சியாக எப்போதும் செயல்பட்டு வருவதாக முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார்.
அப்போது செல்லூர் ராஜூ கூறியதாவது:-
"எங்களுடைய பார்வையில் நாங்கள் தான் எதிர்க்கட்சி. அதிமுக ஆயிரக்கணக்கான கிளைகள் கொண்ட இயக்கமாகும். அதிமுக என்றும் தமிழக மக்களுக்காக சேவை செய்கின்ற இயக்கமாகும். தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகள் தான்.
தற்போது கூட்டங்களில் 5 ஆயிரம் பேர், 10 ஆயிரம் பேர் திரட்டுவது என்பது பெரிய காரியமில்லை. நாங்களெல்லாம் காக்கா கூட்டமில்லை. கொள்கை கூட்டம். இரைகள் போட்டால் காக்கா கூடத்தான் செய்யும். இரை முடிந்ததும் பறந்து விடும். நாகூரில் காலையில் அதிகளவில் புறாக்கள் இருக்கும். மாலையில் அந்தப் புறாக்கள் அனைத்தும் வேளாங்கண்ணிக்கு சென்றுவிடும். இதே போல் நிறம் மாறும் புறாக்களெல்லாம் இருக்கின்றன.
முருகன் ஜி வந்தார், வேலைப்பிடித்தார். அவருக்கு ஒரு பதவி கிடைத்தது. தமிழிசை வந்தார், சிறப்பாக பணியாற்றினார். அவருக்கு ஒரு பதவி கிடைத்தது. அதுபோல ஒரு பதவி தனக்கும் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அண்ணாமலைக்கு இருக்கலாம்."
இவ்வாறு அவர் கூறினார்.