அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை வேண்டும்: நிர்வாகிகள் திடீர் போர்க்கொடி
சென்னையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று நிர்வாகிகள் திடீரென வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை,
அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 23-ந்தேதி சென்னை வானகரத்தில் நடைபெறுகிறது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
இந்த கூட்டத்தை எவ்வாறு நடத்துவது? என்னென்ன தீர்மானங்களை கொண்டு வருவது? என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காக அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
இதில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், கே.ஏ.செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, ப.தங்கமணி, பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா, அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர், எம்.எல்.ஏ.க்கள் கடம்பூர் ராஜூ, பி.எச்.மனோஜ்பாண்டியன் உள்பட நிர்வாகிகள், வி.என்.ரவி, சத்யா, ஆதிராஜாராம் உள்பட மாவட்டச்செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
சிறப்பு அழைப்பாளர்களை அழைக்காதது ஏன்?
கூட்டத்தில், ''அ.தி.மு.க. பொதுக்குழுவில் உறுப்பினர் அல்லாத முக்கிய பிரமுகர்கள் (அதாவது முன்னாள் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. உள்பட) சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்பது எம்.ஜி.ஆர். கால நடைமுறையிலேயே இருந்து வருகிறது. அந்தவகையில் 2,500-க்கும் மேற்பட்டோர் கட்சியின் சிறப்பு அழைப்பாளர்களாக உள்ளனர். ஆனால் இடநெருக்கடி காரணமாக, வானகரத்தில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க முடியாது.
எனவே மாவட்ட செயலாளர்கள், இந்த காரணத்தை சொல்லி சிறப்பு அழைப்பாளர்களை சமாதானம் செய்து, பொதுக்குழு சிறப்பாக நடைபெற உதவியாக இருக்க வேண்டும்'', என்று ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேண்டுகோள் விடுத்து பேசினார்கள். மாவட்ட செயலாளர்களும் அதற்கு ஆதரவாக இருப்பதாக பேசிக்கொண்டிருந்தனர்.
ஒற்றை தலைமை விவகாரம்
அப்போது திடீரென எழுந்து பேசிய முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி, 'இப்போதுள்ள சூழ்நிலையில் கட்சிக்கு நிச்சயம் ஒற்றை தலைமை தேவையான ஒன்று. எனவே இரட்டை தலைமையில் (ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி) செயல்படும் அ.தி.மு.க. ஒற்றை தலைமைக்கு மாறுவது அவசியம். ஜெயலலிதா இருந்தபோது என்ன வேகத்தில் இந்த கட்சி செயல்பட்டதோ, அந்த வேகத்தை ஒற்றை தலைமைதான் தரமுடியும்', என்றார்.
அப்போது, ஜே.சி.டி.பிரபாகர் எழுந்து தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்தார். அவர் பேசும்போது, ''இது தவறான போக்கு. கட்சியின் இரட்டை தலைமை தொடர வேண்டும். வேண்டும் என்றால் ஒரே காரில் வாருங்கள். ஒரே அறிக்கையில் கையெழுத்திட்டு வெளியிடுங்கள். இப்போதைய கூட்டம், பொதுக்குழு சார்ந்தது. இந்த கூட்டத்தில், தீர ஆராயாமல், நிர்வாகிகளை ஒருமனதாக கலந்து பேசாமல் ஒற்றை தலைமை முடிவுக்கு செல்லவேண்டியது அவசியமா?. இது கட்சிக்கு பேராபத்தை ஏற்படுத்திவிடும். எனவே இப்போதுள்ளவாறே இரட்டை தலைமை தொடர வேண்டும்'', என்று பேசினார்.
ஆதரவும், எதிர்ப்பும்...
பி.எச்.மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. பேசும்போது ''அ.தி.மு.க.வுக்கு பல தியாகங்கள் செய்து, கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்க பல எதிர்ப்புகளை கடந்து ஓ.பன்னீர்செல்வம் இந்த இயக்கத்தில் இணைந்தார். எத்தனையோ பயணங்களை இந்த இரட்டை தலைமையிலேயே கட்சி கடந்து வந்துவிட்டது. எனவே ஒற்றை தலைமை இனி தேவையில்லை. இரட்டை இலை போல அ.தி.மு.க.வுக்கு இரட்டை தலைமையும் தொடர வேண்டும்'' என்று வலியுறுத்தி பேசினார்.
இந்த கருத்தை மாவட்ட செயலாளர்கள் பெரம்பலூர் ராமச்சந்திரன், வேளச்சேரி அசோக் உள்பட மாவட்ட செயலாளர்களும் வலியுறுத்தி பேசினார்கள். 'இப்போதைய சூழலில் ஒற்றை தலைமை முடிவு தேவையானது தானா?', என்று ஆர்.வைத்திலிங்கம் கேள்வி எழுப்பினார்.
இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, ப.தங்கமணி, சி.வி.சண்முகம், டாக்டர் சி.விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், கோகுல இந்திரா, பா.வளர்மதி, தளவாய் சுந்தரம் ஆகியோர் ஒற்றை தலைமை கண்டிப்பாக வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்கள். அவர்கள் அனைவருமே, 'அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை என்பது தற்போதைய முக்கிய தேவை. எனவே இந்த ஒற்றை தலைமை முடிவு விரைந்து எடுக்கப்பட வேண்டிய ஒன்று', என்று கூறினார்கள்.
மேலும், ''இப்போது அ.தி.மு.க. இரட்டை தலைமையில் நடைபோட்டு வருகிறது. ஆனால் ஒற்றை தலைமைதான் இனி கட்சிக்கு நல்லது. எனவே யாருடைய மனமும் நோகாமல் ஒற்றை தலைமை எனும் முக்கிய முடிவு கட்சியில் எடுக்கப்பட வேண்டும். நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை இதைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்'', என்றும் குறிப்பிட்டு பேசினார்கள்.
மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தல்
''மற்ற கட்சிகளில் ஒற்றை தலைமைதான் இருக்கிறது. அதுதான் பிரதானம். எனவே நமது கட்சிக்கும் ஒற்றை தலைமை தேவை. எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் இன்னும் சிறப்பாக அ.தி.மு.க. பயணிக்க இது உதவும். எனவே கட்சியின் எதிர்கால நலன் கருதி தலைமை நல்ல முடிவு எடுக்கவேண்டும். பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும்'', என்று மாவட்ட செயலாளர்கள் சார்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, 'கட்சிக்கு ஒற்றை தலைமைதான் முக்கியம். அது எடப்பாடி பழனிசாமியாகவே இருக்கவேண்டும்', என்று பேசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விவகாரம் பற்றி நிர்வாகிகள் பேசிக்கொண்டிருந்தபோது, ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கருத்து எதுவும் கூறவில்லை. நிர்வாகிகளின் கருத்துகளை உன்னிப்பாக கேட்டுக்கொண்டுதான் இருந்தனர்.
அடையாள அட்டை
அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கு முறைப்படியான ஒப்புதல் பொதுக்குழு கூட்டத்தில் வழங்கப்படும் என்பதால், அதுகுறித்தும் நேற்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் தேவையற்ற சலசலப்புகளை தவிர்க்கும் வகையில் இந்த கூட்டத்தில் பங்கேற்போருக்கு அடையாள அட்டை வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 3.40 மணிக்கு நிறைவடைந்தது.
ஒற்றை தலைமை நோக்கி அ.தி.மு.க. நகர தொடங்கி இருப்பது, அரசியல் களத்தை சூடுபிடிக்க செய்துள்ளது.