அதிமுக அலுவலக வன்முறை வழக்கு: ஐகோர்ட்டில் நாளை அறிக்கை தாக்கல் செய்கிறது சி.பி.சி.ஐ.டி
சி.பி.சி.ஐ.டி. போலீசார், மோதல் தொடர்பாக அ.தி.மு.க. அலுவலகத்துக்கு இரண்டு முறை நேரில் சென்று விசாரணை நடத்தினர்
சென்னை,
அ.தி.மு.க.வில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்வதற்காக கடந்த மாதம் (ஜூலை) 11-ந்தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்றது. அப்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கட்சி அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 2 போலீஸார் உட்பட 47 பேர் காயம் அடைந்தனர். காவல்துறையைச் சேர்ந்த 4 வாகனம் உட்பட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. அலுவலகத்தில் இருந்த கோப்புகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் திருடிச்சென்றதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
வன்முறை மற்றும் மோதல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். சி.பி.சி.ஐ.டி. போலீசார், மோதல் தொடர்பாக அ.தி.மு.க. அலுவலகத்துக்கு இரண்டு முறை நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அ.தி.மு.க. அலுவலகம் உடைக்கப்பட்டது தொடர்பான தடயங்கள் மற்றும் அலுவலகங்களில் இருந்து பல்வேறு ஆதாரங்களை போலீசார் சேகரித்தனர். இதனை தொடர்ந்து தலைமை கழக மேலாளர் மகாலிங்கத்தை நேரில் அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திடமும் விசாரணை நடத்தப்பட்டது. இருவரும் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் போலீசார் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். ஓ.பி.எஸ். ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி என்பவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்து உள்ளனர். அ.தி.மு.க. அலுவலகம் மோதல் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள் மற்றும் வாக்குமூலம் அனைத்தையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரிவான அறிக்கையாக தயாரித்துள்ளனர்.
அலுவலக மோதல் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நாளை நடைபெற உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது மோதல் தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை சேகரித்து உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நாளை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.