விஷ சாராய மரணங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கண்டித்து அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்
மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
சென்னை,
தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சமீபத்தில் விஷ சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன்படி, விஷ சாராயம் விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, உடனடியாக விஷ சாராயத்தை விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க பல்வேறு இடங்களில் தொடர் சோதனைகள் நடத்தப்பட்டு விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்து அவர்களிடம் இருந்து கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விஷ சாராயம் குடித்து 22 பேர் இறந்ததற்கு கண்டனம் தெரிவித்து, தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று காலை 10 மணிக்கு அனைத்து கலெக்டர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் இல்லாத இடங்களில் தாசில்தார் அலுவலகங்கள் அல்லது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடக்கிறது.