ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அதிமுக ஆதரவு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை,
நாட்டில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு சிறப்புக்குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம் உள்ளதா என்பது குறித்து இந்த சிறப்புக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
"ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை அதிமுக உறுதியாக ஆதரிக்கிறது. மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டுமென அதிமுக வலியுறுத்துகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தும். ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வந்தால் ஜனரஞ்சக திட்டங்களை விட வளர்ச்சியே முக்கியமாக இருக்கும்.
எந்த அரசும் கொள்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்கு நீண்டகால இடையூறு இல்லாத ஆட்சியை வழங்கும். நாட்டின் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிப்பதுடன், அரசியல் ஸ்திரமின்மையை தவிர்க்கும். ஒரேநாடு ஒரே தேர்தல் கொள்கை தேர்தல் நேரம், பெரும் செலவை மிச்சப்படுத்தும்." என்று தெரிவித்துள்ளார்.