சில மாவட்டத்தில் வென்றிருந்தால் ஆளும் கட்சியாக அதிமுக இருந்திருக்கும் - எடப்பாடி பழனிசாமி பேச்சு
அதிமுக ஆட்சியில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் கிருஷ்ணகிரியில் பாதி தொகுதியியை வென்றுள்ளோம், இன்னும் சில மாவட்டத்தில் வென்றிருந்தால் ஆளும் கட்சியாக அதிமுக இருந்திருக்கும் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் அதிமுக 51ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கொடியை ஏற்றி வைத்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், பாலகிருஷ்ணரெட்டி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:-
நாம் ஆட்சியில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் கிருஷ்ணகிரியில் பாதி சட்டமன்ற தொகுதியியை வென்றுள்ளோம். ஒரு சில மாவட்டத்தில் வென்று இருந்தால் இன்று ஆளும் கட்சியாக அதிமுக இருந்து இருக்கும். சற்று உழைப்பு குறைவாக இருந்த காரணத்தால் இன்று ஸ்டாலின் முதல்வராகிவிட்டார்.
51வது ஆண்டு துவக்க விழாவை கொண்டாடி வருகிறோம் இதில் 31 ஆண்டு நாம் ஆட்சி செய்து உள்ளோம். எம்.ஜி.ஆர்க்கும், ஜெயலலிதாவுக்கும் குடும்பம் கிடையாது. நம்மை தான் குடும்பமாக நினைத்தார்கள். அதனால் தான் நமக்காக இத்தனை திட்டங்களை கொண்டு வந்தார். ஓலா எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தில் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்து உள்ளது. இது அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாகும்.
கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரூ.400 கோடி மதிப்பில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை அதிமுக ஆட்சியில் கொடுத்தோம். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த நான் கிளை செயலாளராக இருந்து தற்போது இந்த பொறுப்பிற்கு வந்து உள்ளேன். அதனால் ஒரு ஒரு பொருப்பாளருக்கு என்ன கஷ்டம் என்பது எனக்கு நன்கு புரியும்.
10 முறை அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்டு உள்ளேன். சட்டமன்றத்தின் வெளியில் வந்து சட்டையை கிழித்து கொண்டு ஸ்டாலின் சாலையில் அமர்ந்தார். அவர் சட்டையை யாரும் தொடவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. அதிமுக ஆட்சியை வீழத்த வேண்டும் என அதிமுகவுக்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களித்த ஓ.பி.எஸ் எப்படி அதிமுகவுக்கு விசுவாசமாக இருக்க முடியும். இனி அதிமுகவில் ஓ.பி.எஸ்-ஐ இணைக்க 1% கூட வாய்ப்பு கிடையாது. வாய்ப்பு கொடுக்கும் போது எல்லாம் அதிமுகவை அழிக்க நினைக்கிறார் ஓ.பி.எஸ்.
அடுத்து வருகின்ற எந்த தேர்தலாக இருந்தாலும் அதிமுக தான் வெல்லும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் அதிமுக வெல்லும்
இவ்வாறு அவர் பேசினார்.