துப்புரவு பணியாளர்கள் 586 பேருக்கு வேட்டி- சேலை
தஞ்சை மாநகராட்சி சார்பில் நடந்த தூய்மை பொங்கல் விழாவில் 586 துப்புரவு பணியாளர்களுக்கு வேட்டி- சேலை வழங்கப்பட்டது.
தஞ்சை மாநகராட்சி சார்பில் நடந்த தூய்மை பொங்கல் விழாவில் 586 துப்புரவு பணியாளர்களுக்கு வேட்டி- சேலை வழங்கப்பட்டது.
தூய்மை பொங்கல் விழா
தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தஞ்சை மாநகராட்சியின் சார்பில் பழைய பஸ் நிலையம் அருகில் துப்புரவு பணியாளர்களுக்கான தூய்மை பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி முன்னிலை வகித்தார். மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் கலந்து கொண்டு பேசினார்.
586 பேருக்கு வேட்டி- சேலை
விழாவில் தஞ்சை மாநகராட்சியின் 51 வார்டுகளில் தினமும் உருவாகும் 107டன் குப்பைகளையும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கும் 586 பணியாளர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வேட்டி-சட்டை, சேலை ஆகியவை வழங்கப்பட்டது. பெண் பணியாளர்கள் 282 பேருக்கு சேலையும், ஆண் பணியாளர்கள் 304 பேருக்கு வேட்டி-சட்டையும் வழங்கப்பட்டன.
விழாவில் துப்புரவு பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து புது பானையில் தூய்மை பொங்கல் வைத்தனர். மேலும் நம் பாரம்பரிய விளையாட்டுகளை மையப்படுத்தி பானை உடைத்தல் உள்ளிட்ட நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினர்களும் துப்புரவு பணியாளர்களும் உற்சாகமாக பங்கேற்றனர். இதனை தொடர்ந்து கிராமிய இசை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் மருத்துவ துறையினர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி வரவேற்றார். முடிவில் துப்புரவு ஆய்வாளர் அசோகன் நன்றி கூறினார்.