விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை


விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை
x
தினத்தந்தி 4 Dec 2022 12:15 AM IST (Updated: 4 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விளையாட்டு வீரர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வருகிற 15-ந் ேததி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை

விளையாட்டு வீரர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வருகிற 15-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி விண்ணப்பதாரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கெடுத்து பதக்கம் வென்றிருக்க வேண்டும்.

பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்துக்கு, அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கங்களால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான சீனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றிருக்க வேண்டும்.

பயிற்சி

ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் போட்டியில் தனிநபர் விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்றிருக்க வேண்டும். வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்துக்கு, அரசு, அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள விளையாட்டு அமைப்புகளால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தங்கம், வெள்ளிப்பதக்கம் வென்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் வீரர், வீராங்கனைகளுக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை அவர்கள் விளையாட்டு பயிற்சிகளுக்கான செலவினங்களை திரும்ப வழங்கிடும் வகையில் உதவித் தொகை வழங்கப்படும்.

விவரங்களை பதிவேற்ற வேண்டும்

திட்டத்தில் பயன்பெறும் வீரர், வீராங்கனைகள் ஒவ்வொரு மாதமும் தங்கள் பயிற்சி விவரங்கள், போட்டிகளில் பங்கேற்ற விவரங்கள், காயம் மற்றும் சிகிச்சை விவரங்கள் ஏதும் இருப்பின் அவற்றை இணையதளத்தில் அவர்களுக்கென வழங்கப்பட்டுள்ள பிரத்யேக பக்கத்தில் பதிவேற்ற வேண்டும்.

உதவித் தொகை காலத்தில் 3 மாதங்கள் வரை விவரங்களை இணைய வழியில் பதிவேற்றாதவர்கள், 6 மாதங்கள் வரை எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காதவர்கள், ஓர் ஆண்டு வரை தேசிய அளவிலான போட்டி அல்லது அதற்கு மேலான போட்டிகளில் முதல் 8 இடங்களுக்குள் பெற இயலாதவர்கள், 2 ஆண்டுகள் வரை எவ்வித சர்வதேச பதக்கமும் பெறாதவர்கள் ஆகியோருக்கு உதவித் தொகை நிறுத்தப்படும்.

ரூ.25 லட்சம்

அதிகபட்ச உதவித் தொகை ஒரு ஆண்டுக்கு எலைட் திட்டத்திற்கு ரூ.25 லட்சம் வரையிலும், எம்.ஐ.எம்.எஸ்., திட்டத்திற்கு ரூ.10 லட்சம் வரையிலும், சி.டி.எஸ்., திட்டத்திற்கு ரூ.2 லட்சம் வரையிலும் வழங்கப்படும்.

இத்திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்களை வருகிற 15-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே அஞ்சல் வழியில் நேரடியாக விண்ணப்பித்திருந்தாலும், மீண்டும் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story