ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு ஐம்பொன் உருவச்சிலை
ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் ஐம்பொன்னால் ஆன உருவச்சிலை நேற்று கும்பகோணத்தில் இருந்து டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தஞ்சை,
இந்திய முப்படைகளின் முதல் தலைமை தளபதி பிபின் ராவத் கடந்த ஆண்டு(2021) டிசம்பர் மாதம் 8-ந் தேதி நீலகிரி மாவட்டம் வெலிங்கடன் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் பலியானார்.
இந்த கோர விபத்தில் முப்படை தளபதி பலியானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஐம்பொன் உருவச்சிலை
இந்த நிலையில் கடலூர் மாவட்ட முன்னாள் படை வீரர்கள் நலச் சங்கம் சார்பில் முப்படை தளபதி பிபின் ராவத்துக்கு ஐம்பொன்னால் ஆன மார்பளவு உருவச்சிலை செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அவருடைய உருவச்சிலை வடிவமைக்கப்பட்டது. இதற்கான பணிகள் முழுமை அடைந்ததை தொடர்ந்து நேற்று பிபின் ராவத் உருவச்சிலை கும்பகோணத்தில் இருந்து டெல்லிக்கு கார் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
டெல்லிக்கு அனுப்பி வைப்பு
இதற்கான நிகழ்ச்சியில் ராணுவ வீரர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு பிபின் ராவத்தின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தி, தேசபக்தி பாடல்கள் பாடி சிலையை டெல்லிக்கு வழி அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சிலை அமைப்பாளர்கள் கூறும்போது, 'பிபின் ராவத் சிலை கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு செல்ல உள்ளது. அப்போது ராணுவ வீரர்கள் பிபின் ராவத் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்த உள்ளனர். வருகிற 2-ந் தேதி(வெள்ளிக்கிழமை) டெல்லியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் சிலை ஒப்படைக்கப்பட உள்ளது' என்றனர்.