தூத்துக்குடியில் விமான சரக்கு போக்குவரத்து தொடங்க வாய்ப்பு; கலெக்டர் தகவல்


தூத்துக்குடியில் விமான சரக்கு போக்குவரத்து தொடங்க வாய்ப்பு; கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 18 Feb 2023 12:15 AM IST (Updated: 18 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்க பணிகள் முடிவடைந்த பிறகு விமான சரக்கு போக்குவரத்து தொடங்க வாய்ப்பு உள்ளது என்று கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்க பணிகள் முடிவடைந்த பிறகு விமான சரக்கு போக்குவரத்து தொடங்க வாய்ப்பு உள்ளது என்று கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.

கருத்தரங்கம்

தூத்துக்குடியில் துறைமுகம் சார்ந்த போக்குவரத்து வளர்ச்சி குறித்த கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்குக்கு இந்திய தொழிற் கூட்டமைப்பு மாநில துணைத்தலைவர் சங்கர் வானவராயர் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட தலைவர் தாமஸ் ஏ.ஆண்டனி வரவேற்று பேசினார். ஒருங்கிணைப்பாளர் ஜே.டேவிட் ராஜா பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

சரக்கு போக்குவரத்து

கருத்தரங்கில் கலெக்டர் செந்தில்ராஜ் பேசியதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் வளர்ந்து வரும் மாவட்டமாக உள்ளது. இங்கு சாலை, ரெயில், ஆகாய வழி, கடல் வழி போக்குவரத்து வசதிகள் உள்ளன. இதனால் பலர் இங்கு முதலீடு செய்ய வந்து கொண்டிருக்கின்றனர். இங்கு சர்வதேச அறைகலன் பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில் வளர்ச்சி சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. தூத்துக்குடி துறைமுகத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. விமான நிலைய ஓடுதளம் 1.3 கிலோ மீட்டரில் இருந்து 3.1 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக மாற்றும் பணிகள் நடக்கிறது. புதிய பயணிகள் முனையம் அமைக்கும் பணியும் நடக்கிறது. இந்த பணிகள் முடிக்கப்பட்ட பிறகு பழைய பயணிகள் முனையம் சரக்கு போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும். அதன்பிறகு தூத்துக்குடியில் இருந்து சென்னை, டெல்லி, மும்பைக்கு சரக்குகள் அனுப்புவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

மேலும், நாகப்பட்டினம் முதல் கன்னியாகுமரி வரை கடற்கரை சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்றுவதற்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. தூத்துக்குடியில் தொழிற்சாலைகளின் நீர் தேவையை பூர்த்தி செய்ய 12 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தூத்துக்குடியில் மேலும் ஒரு சிப்காட் அமைப்பதற்காக அல்லி குளத்தில் 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் இன்னும் பத்து ஆண்டுகளில் உலக அளவில் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்.

இவ்வாறு அவர் பேசினார்.

துறைமுகம்

கருத்தரங்கில் வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் பேசுகையில், "தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பெரிய அளவிலான கப்பல்கள் வந்து செல்லும் வகையில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி துறைமுகம் விரைவில் சரக்கு பெட்டக போக்குவரத்து முனையமாக மாறும். தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பில் வெளித்துறைமுக வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது இன்னும் 5 ஆண்டுகளில் முடிவடையும். இதுதவிர உள் துறைமுக வளர்ச்சி திட்டம், வடக்கு சரக்கு பெட்டக முனையம் உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன.

துறைமுகத்தில் நடப்பு ஆண்டில் 38 மில்லியன் டன் சரக்கு கையாண்டு கடந்த ஆண்டை விட 12 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது" என்றார்.

கருத்தரங்கில் துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story