ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும்
நீடாமங்கலம் அருகே ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் அருகே ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரெகுநாதன் ஏரி
நீடாமங்கலம் அருகே உள்ள பாப்பையன் தோப்பு, அனுமந்தபுரம், நீடாமங்கலம் சந்தன படித்துறை மற்றும் முல்லைவாசல், பெரம்பூர் பகுதிகளிலிருந்து கோரையாறு, வெண்ணாறுகளில் பாசன வாய்க்கால் தொடங்கி செல்கிறது. இந்த பாசன வாய்க்கால்களின் வடிகால் ரிஷியூரிலிருந்து பச்சைகுளம் வரை சுமார் 1 கிலோ மீட்டருக்கு மேலாக பெரம்பூர், அனுமந்தபுரம், ரிஷியூர், வரதராஜப்பெருமாள் கட்டளை, நன்மங்கலம், பச்சைகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் மழை நீர் வடிகாலாக ரெகுநாதன் ஏரியில் வடிகிறது.
பின்னர் பச்சைக்குளம் பாலத்திலிருந்து கிளியனூர், தண்டாலம், வாழாச்சேரி, அதங்குடி பகுதிக்கு சென்று அங்குள்ள வெண்ணாற்றில் வடிகாலாக கலக்கிறது.
ஆகாயதாமரைகளை அகற்ற வேண்டும்
ரிஷியூரிலிருந்து பச்சைக்குளம் வரை ரெகுநாதன் ஏரியில் 1 கிலோ மீட்டருக்கு மேல் வடிகாலில் ஆகாய தாமரைகள் படர்ந்து வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்துள்ளது. இதனால் தண்ணீ்ர் தேங்கி வடிய முடியாத நிலை உள்ளது.
மேலும் மழை காலம் தொடங்கினால் வடிகாலில் மழைநீர் தேங்கி நடவு வயல்களில் புகுந்து ஆண்டு தோறும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே 100 நாள் வேலை திட்டத்தில் ரிஷியூரிலிருந்து பச்சைக்குளம் வரை ரெகுநாதன் ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.