ஆயிரத்தெண் விநாயகர் கோவில் வருசாபிஷேக விழா
கோவில்பட்டியில் ஆயிரத்தெண் விநாயகர் கோவில் வருசாபிஷேக விழா நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலையிலுள்ள ஆயிரத்தெண் விநாயகர் கோவில் வருசாபிஷேக விழா நேற்று நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முகர் ஜபம,் கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கோவில் பிரகாரம் வழியாக எடுத்து வந்து கோபுர கலசத்துக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து மூலஸ்தானத்தில் 21 அபிஷேக சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். தொடர்ந்து கோவில் வளாகத்தில் அவர் மரக்கன்றுகள் நட்டினார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகர அவைத் தலைவர் அப்பாசாமி, நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ் மற்றும் விழா கமிட்டி தலைவர் வாசுதேவன், துணை தலைவர் குருநாதன், செயலாளர் செல்வம், துணை செயலாளர் பால கணேஷ், பொருளாளர் ராஜ் என்ற மாரியப்பன், செயல் தலைவர்கள் ரவி, ராமானுஜம் கலந்து கொண்டனர்.