விமான நிலையம்- கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் 2026-க்குள் முடிவடையும் எனத்தகவல்
கடந்த ஆண்டு சமர்பிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையில், 2026ஆம் ஆண்டுக்குள் மெட்ரோ ரயில் திட்டம் முடிவடையும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை 10 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் முதல் கட்ட விரிவாக்க திட்ட பணிகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பப்பட்டது.
மெட்ரோ ரயில் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே சமர்ப்பித்ததாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை விமான நிலையம் முதல் செங்கல்பட்டு வரை உயர்மட்ட சாலை அமைக்கப்படுவதை பொறுத்தே, மெட்ரோ விரிவாக்க பணிகள் நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு சமர்பிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையில், 2026ஆம் ஆண்டுக்குள் மெட்ரோ ரயில் திட்டம் முடிவடையும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.