ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் ஆல்வின் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சிம்புதேவன், ஏ.ஐ.டி.யு.சி. கவுரவத்தலைவர் கோவிந்தராஜ், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் சங்கர் மேஸ்திரி, சட்ட ஆலோசகர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளராக ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ சம்மேளன மாநில பொதுச்செயலாளர் மாரியப்பன் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆட்டோவுக்கு செலுத்த வேண்டிய பசுமை வரி, ஆட்டோ பெயர் மாற்றத்திற்கான தொகை, தகுதிச்சான்று புதுப்பிக்காவிட்டால் செலுத்த வேண்டிய அபராத தொகை உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கான கட்டண விவரப்பட்டியல் வைக்க வேண்டும். ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்க கட்டவேண்டிய கால அவகாச விவரம் மற்றும் சலான் தொகை பட்டியல் விவரங்களை வைக்க வேண்டும். ஆட்டோக்களின் பக்கவாட்டில் மஞ்சள் ஸ்டிக்கர் ஒட்டச்சொல்லி நிர்பந்திக்க கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில், ஆட்டோ சங்க மாவட்ட துணைத்தலைவர் லோகேஷ்குமார், துணை செயலாளர் மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ஏழுமலை நன்றி கூறினார்.