நெடி கிராமத்தில்அய்யனாரப்பன் கோவில் தேரோட்டம்ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
நெடி கிராமத்தில் அய்யனாரப்பன் கோவில் தேரோட்டம் நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனா்.
மயிலம்,
மயிலம் அருகே நெடி கிராமத்தில் பூர்ண புஷ்பகலா சமேத கல்வராய சாமி என்கிற அய்யனாரப்பன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவில், தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சிம்ம வாகனம், பூத வாகனம், நாகவானம், ரிஷபம், யானை, இந்திர விமானம் என்று வெவ்வேறு வாகனங்களில் சாமி எழுந்தருளி வீதிஉலா வந்து காட்சியளித்தார். நேற்று முன்தினம் அய்யனராப்பன், பூர்ணா புஷ்பகலா சாமிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று, குதிரை வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சிகர திருவிழாவான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், பூரண புஷ்பகலா சமேதமாக அய்யனாரப்பன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி. கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது. விழாவில் இன்று(புதன்கிழமை) இரவு முத்து பல்லக்கில் சாமி வீதிஉலா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நெடி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.