அகிலாண்ட ஈஸ்வரி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்
கயத்தாறு அகிலாண்ட ஈஸ்வரி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது.
கயத்தாறு:
கயத்தாறில் அகிலாண்டேஸ்வரி சமேத கோதண்ட ராமேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.
9-வது திருநாளன்று மாலை முதல் விழா தொடங்கி ஒயிலாட்டம், கிரக ஆட்டம், சிலம்பாட்டம், வில்வித்தை உள்பட பல்வேறு வீர விளையாட்டுகள் நடைபெற்றன. இரவு 11 மணிக்கு தனித்தனி சப்பரங்களில் சுவாமி- அம்பாள் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக 10-வது திருநாளான நேற்று காலை 10 மணிக்கு தேரோட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தேர் நான்கு ரத வீதிகள் வழியாக சென்று மதியம் 12.30 மணிக்கு நிலைக்கு வந்தது. விழாவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் செல்வகுமார், ஒன்றிய மாணவரணி செயலாளர் நவநீதகிருஷ்ணன், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் கோதண்டராமர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பேரவை செயலாளர் கருப்பசாமி பாண்டியன், கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் அய்யப்பன், விழாக்குழு நிர்வாகிகள் லட்சுமி ஐயர், திருச்சி சிவா மற்்றும் கயத்தாறு உள்பட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தையொட்டி ஆங்காங்கே பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.