கோவில்பட்டியில் அகிலபாரத இந்து மகா சபையினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு அகிலபாரத இந்து மகாசபையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு அகில பாரத இந்து மகா சபாவினர் மாநில துணை தலைவர் புருஷோத்தமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
எட்டயபுரம் தாலுகா உருளைகுடி கிராமத்தில் காளியம்மன் கோவில் இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அந்த ஆக்கிரமிப்பை அகற்றி, கோவில் பயன்பாட்டிற்கு கொடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சங்கர் ராஜா, பொதுச் செயலாளர் ஆரோக்கியம், மாவட்ட செயலாளர்கள் முத்துக்குமார், முத்து, பொருளாளர் பழனிச்சாமி, நகர பொதுச்செயலாளர் ராமசாமி, நகர செயலாளர்கள் காந்தாரி முத்து, ஹரிஹர வெங்கட கிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் உதவி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் இசக்கிராஜ் உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.