ஆலங்குளம் கால்வாயை அகலப்படுத்த வேண்டும்-கலெக்டருக்கு, மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கோரிக்கை
ஆலங்குளம் கால்வாயை அகலப்படுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு, மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
தென்காசி மாவட்ட கலெக்டருக்கு, ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறிஇருப்பதாவது:-
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிற்றாரின் குறுக்கே ஐந்தாவது அணைக்கட்டான பாவூர் அணைக்கட்டின் கீழ் நாகல்குளம் உபரி நீர் மூலம் தண்ணீர் பெறப்பட்டு, ஆலங்குளம் கால்வாய் வழியாக தொட்டியங்குளம் வரை செல்கிறது. இந்த ஆலங்குளம் கால்வாயின் மொத்த நீளம் 10,600 மீட்டர் ஆகும். இதன் மூலம் பூலாங்குளம், வெங்கடாம்பட்டி, மடத்தூர், ஆண்டிப்பட்டி, கோவிலூற்று மற்றும் ஆலங்குளம் ஆகிய ஊர்கள் பயன்பெறுகின்றன.
இந்த கால்வாய் கடந்த காலங்களில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தினால் மண்திட்டுகள் உருவாகியுள்ளதோடு, சில பகுதிகளில் கால்வாய் அடிமட்டம் பாறைகளால் தண்ணீர் செல்ல இடையூறாக உள்ளது. கால்வாய் நீர்ப்போக்கிற்கு இடையூறு வராதபடியும், நீர் கொள்திறன் சீராக சென்று அடைவதற்கு ஏற்றவாறு தற்போது உள்ள கால்வாய் தரை மட்டத்திற்கு மேல் மற்றும் பக்கவாட்டில் கடினப்பாறைகளை அகற்றி கொடுத்து, கால்வாயை அகலப்படுத்த வேண்டும். மேலும் கால்வாயில் அதன் பக்கவாட்டில் கான்கிரீட் சுவர்கள் அமைத்திடவும், தேவையான இடங்களில் பாலம் அமைக்கவும், விவசாய பயன்பாட்டிற்கு தேவையான கால்வாய்கரையில் தார்ச்சாலை அமைக்கவும் வேண்டியுள்ளது. இப்பணியினை செயல்படுத்துவதன் மூலம் 302.50 ஏக்கர் பாசன வசதி பெறுவதோடு சுற்றுவட்டார கிராமங்களுக்கு நிலத்தடிநீர், குடிநீர் பயன்பாடு பெறுகின்றன. எனவே இந்த பணியினை விரைந்து செயல்படுத்திட ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.