கடல்சீற்றத்தால் கடற்கரையோரம் குவியும் பாசிகள்
கடல் சீற்றம் காரணமாக ஆற்றங்கரை முதல் சித்தார்கோட்டை வரையிலான கடற்கரை பகுதி முழுவதும் கடல்பாசிகள் குவிந்து கிடக்கின்றன.
பனைக்குளம்,
கடல் சீற்றம் காரணமாக ஆற்றங்கரை முதல் சித்தார்கோட்டை வரையிலான கடற்கரை பகுதி முழுவதும் கடல்பாசிகள் குவிந்து கிடக்கின்றன.
கடல் சீற்றம்
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் கடல் ஆமை, டால்பின், கடல் பசு உள்ளிட்ட பல அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதை தவிர கடலுக்கு அடியில் பல வகையான கடல் பாசிகள், தாழை செடிகள் உள்ளிட்ட இயற்கை தாவரங்களும் வளர்ந்து வருகின்றன.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பாக்ஜலசந்திக்கு உட்பட்ட மண்டபம் முதல் உச்சிப்புளி, பிரப்பன் வலசை, ஆற்றங்கரை, அழகன்குளம், பனைக்குளம், தேவிபட்டினம் வரையிலான வடக்கு கடல் பகுதியில் கடந்த 2 நாட்களாகவே வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசுவதுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டு வருகின்றது.
குவியும் பாசிகள்
இதனிடையே கடல் சீற்றமாக காணப்பட்டு வருவதால் ஆற்றங்கரை முதல் சித்தார்கோட்டை வரையிலும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தை தாண்டி கடற்கரை பகுதி முழுவதும் ஏராளமான பாசிகள் குவியல், குவியலாக கரை ஒதுங்கி கிடக்கின்றன.
இது குறித்து ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் கூறும் போது:-
கடந்த 2 நாட்களாகவே வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசுவதுடன் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகின்றது. இதுபோன்ற காற்று, கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் கடல் பாசிகள் கரை ஓதுங்கும். ஆனால் கடந்த 2 நாட்களாகவே அதிகமாக கடற்கரை பகுதி முழுவதும் கடல் பாசிகள் கரை ஒதுங்கி உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆற்றங்கரை முதல் சித்தார்கோட்டை வரையிலான கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கி கிடக்கும் கடல் பாசிகளை அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் மிகுந்த ஆச்சரியத்துடன் நின்று வேடிக்கை பார்த்து செல்கின்றனர். அதுபோல் கடற்கரை பகுதி முழுவதும் மிக நீண்ட தூரத்திற்கு கோடுகள் வரைந்தது போன்று கடல் பாசிகள் அழகாக ஒரே வரிசையாக கிடக்கின்றன.இதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு கடல்பாசிகள் கரை ஒதுங்கி கிடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.