கழுகுமலை பகுதியில் பாசிப்பயறு, உளுந்து செடிகள் தண்ணீரில் மூழ்கின


கழுகுமலை பகுதியில் பாசிப்பயறு, உளுந்து செடிகள் தண்ணீரில் மூழ்கின
x
தினத்தந்தி 28 Oct 2022 12:30 AM IST (Updated: 28 Oct 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் கழுகுமலை பகுதியில் பாசிப்பயறு, உளுந்து செடிகள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.

தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூர்:

தூத்துக்குடி மாவட்டத் தில் பரவலாக மழை பெய்தது. கழுகுமலை பகுதியில் பெய்த பலத்த மழையால் பாசிப்பயறு, உளுந்து செடிகள் தண்ணீர் மூழ்கின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

உளுந்து பயிர்கள்

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை மற்றும் அதை சுற்றி குமாரபுரம், வெங்கடேஸ்வரபுரம், துரைச்சாமிபுரம், ராமநாதபுரம், லட்சுமிபுரம், வேலாயுதபுரம், காலாங்கரைபட்டி, வானரமுட்டி உள்ளிட்ட சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் பருத்தி, உளுந்து, பாசிப்பயறு உள்ளிட்டவைகளை பயிர் செய்துள்ளனர்.

கடந்த சில மாங்களில் பெய்த மழை காரணமாக பயிர்கள் முளைக்க தொடங்கியது. மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு, பருத்தி உள்ளிட்ட செடிகள் ஓரளவு வளர்ந்த நிலையில் இருந்தது.

தண்ணீரில் மூழ்கியது

இந்த நிலையில் நேற்று முன்தினம் கழுகுமலை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் உள்ள சிறு குளங்கள் நிரம்பியது. மேலும் கழுகுமலை- சிவகாசி செல்லும் சாலையின் அருகே உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியது.

இதனால் உளுந்து, பாசிப்பயறு செடிகள் தண்ணீரில் மூழ்கியது. இதை பார்த்த விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

வாறுகால் வசதி

இதுகுறித்து கழுகுமலையை சேர்ந்த விவசாயி காளிராஜ் கூறுகையில்-

கழுகுமலை மற்றும் சுற்றுவட்டார விவசாயிகள் பருவ மழையை நம்பித்தான் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் பருவமழை பெய்யாததால் விவசாய தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இந்த ஆண்டும் பருவமழையை நம்பித்தான் பயிர்களை விதைத்தோம். தற்போது பயிர்கள் முளைத்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழைக்கு சில விவசாய நிலங்களின் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது.

இப்பகுதியில் வாறுகால் வசதி இல்லாததால் கழுகுமலை ஆறுமுகம்நகர் பகுதியில் இருந்து வரும் தண்ணீர் செல்ல வழியில்லாமல் விளை நிலங்களுக்குள் சென்று விடுகிறது.

இதனால் விதைத்து மூன்று மாதங்களில் அறுவடை செய்யும் இப்பயிர்கள் தண்ணீர் தேங்கி அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே கழுகுமலை-சிவகாசி சாலையின் அருகில் கிரிவலப்பாதையில் வாறுகால்கள் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story