அந்நிய நாட்டு மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும்


அந்நிய நாட்டு மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும்
x

அரசு பள்ளிகளில் பழ மரங்களை வெட்டி அகற்றுவதற்கு பதிலாக, அந்நிய நாட்டு மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்,

அரசு பள்ளிகளில் பழ மரங்களை வெட்டி அகற்றுவதற்கு பதிலாக, அந்நிய நாட்டு மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கனமழையால் மரங்கள் விழுந்தது

கூடலூர் பகுதியில் 15 நாட்களுக்கு மேலாக தொடர் கனமழை பெய்தது. தொடர்ந்து சூறாவளி காற்றும் பலமாக வீசியது. இதனால் பல இடங்களில் பயிரிட்டு இருந்த வாழைகள் முறிந்து விழுந்தன. மேலும் ஏராளமான இடங்களில் மரங்கள் மற்றும் கிளைகள் சரிந்து விழுந்து மின் கம்பங்கள் சேதமானது. இதேபோல் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களும் சேதமடைந்தது.

மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததால் தேசிய பேரிடர் மீட்பு படையினர் கூடலூர் பகுதியில் முகாமிட்டனர். இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடலூர் தாலுகா பகுதியில் சாலையோரம் மற்றும் அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூட வளாகங்களில் எந்த நேரத்திலும் முறிந்து விழும் அபாயத்தில் உள்ள ஆபத்தான மரங்களை கண்டறிந்து உடனடியாக வெட்டி அகற்றும் பணியும் தொடங்கப்பட்டது.

பழ மரங்களும் அகற்றம்

பெரும்பாலான அரசு பள்ளிக்கூட வளாகங்களில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்த நிகழ்ச்சிகளில் பழ வகை மற்றும் எந்த பயன்பாட்டுக்கும் உதவாத அந்நிய நாட்டு மரக்கன்றுகளும் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. தற்போது தொடர் கனமழை பெய்ததால் பள்ளிக்கூட கட்டிடங்கள் மற்றும் மாணவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக குந்தலாடி அரசு பள்ளியில் பல ஆண்டுகளாக பாதுகாத்து வந்த மாமரங்கள் வெட்டப்பட்டு உள்ளது. இது பெற்றோர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

மா, நாவல், அத்தி உள்ளிட்ட பழ மரங்கள் நிலத்தில் உறுதித்தன்மை கொண்டவை. ஆனால், எதற்கும் பயன்படாத அந்நிய நாட்டு மரங்கள் எளிதில் உடைந்து விழக்கூடியவை. பழ மரங்களை வளர்ப்பது கடினம். பறவை, குரங்கு, அணில் உள்ளிட்ட உயிரினங்களுக்கு பயன்படுகிறது. அந்நிய நாட்டு மரங்கள் சில மாதங்களிலேயே பெரியதாக வளர்ந்து விடுகிறது. எதற்கும் பயன்படாது. எனவே, அரசு அலுவலகங்கள், பள்ளி வளாகங்களில் அந்நிய நாட்டு மரங்களை முழுமையாக அகற்றிவிட்டு பழ மரங்களை நட்டு பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story