உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்


உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்
x

உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்

திருப்பூர்

வீரபாண்டி

உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்று வார்டு கமிட்டி கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.

வார்டு கமிட்டி கூட்டம்

திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட 41-வது வார்டு முருகம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி அருகே வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டம் நடந்தது. இதற்கு வார்டு கவுன்சிலரும், மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் தலைமை தாங்கினார். கமிஷனர் கிராந்திகுமார் பாடி முன்னிலை வகித்தார்.

சிறப்பு பார்வையாளர்களாக தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் கலந்துகொண்டனர்.

உள்ளாட்சி தினம்

கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் இந்த கூட்டங்களை நடத்த வேண்டும் என நவம்பர் 1-ந் தேதி உள்ளாட்சி தினமாகவும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அந்த வகையில் இந்த கூட்டம் நடந்து வருகிறது.

குடியரசு தினம், உலக தண்ணீர் தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி மற்றும் தற்போது நவம்பர் 1-ந் தேதி உள்ளாட்சி தினம் ஆகிய 6 நாட்கள் ஆண்டிற்கு இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இந்த கூட்டங்கள் மூலம் பொதுமக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் தங்களது கோரிக்கைகள் குறித்து தெரிவித்து தீர்வு காண முடியும்.

திருப்பூர் மாநகராட்சியில் 1036 பணிகள் ரூ.100 கோடி மதிப்பில் செய்யப்பட்டுள்ளது. இன்னும் பல்வேறு பணிகளுக்காக ரூ.400 கோடி கேட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 4-வது குடிநீர் திட்டம் பொங்கல் தினத்தன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும். திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.60 கோடியில் கேன்சர் மருத்துவமனை அமைக்கப்பட இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் பேசியதாவது:-

சிவசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.14.50 லட்சம் மதிப்பில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. 41-வது வார்டில் 12 புதிய தார்ச்சாலை வசதிக்காக ரூ.2.61 கோடி மதிப்பில் பணிகள் நடந்துள்ளது. குளத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி ரூ.1.35 கோடி மதிப்பில் செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது. அரசின் அனைத்து திட்டங்களும், பொதுமக்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டு சிறந்த வார்டாக 41-வது வார்டு மாற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.



Next Story