அனைத்து சாதிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்


அனைத்து சாதிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
x
தினத்தந்தி 12 April 2023 12:15 AM IST (Updated: 12 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நாட்டில் ஜனநாயகம் வலுவாக இருக்க அனைத்து சாதிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி கூறினார்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா, திரவுபதியம்மன் கோவிலில் கடந்த 7-ந் தேதி மாலை தீமிதி திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவின்போது, கோவிலுக்குள் தங்களை அனுமதிக்காமலும், கோவிலுக்குள் நுழைந்த வாலிபர் ஒருவரை தாக்கியதாகவும் கூறி, ஒரு தரப்பு மக்கள் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக நடந்த சமாதான கூட்டத்திலும் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பா.ம.க. வக்கீல் பாலு, அக்கிராமத்திற்கு நேரில் சென்று ஒரு தரப்பினரிடம் நடந்ததைப்பற்றி கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி தலைமையில் பா.ம.க.வினர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அதன் பின்னர் வெளியே வந்த பு.தா.அருள்மொழி, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜனநாயகம் வலுவாக...

வன்னியர் சங்கத்தை பொறுத்தவரை வன்னியர்களும், கீழ்சாதி என்று சொல்லக்கூடிய ஆதிதிராவிடர்களும் இணைந்து வாழ வேண்டும் என்பதிலேயே நாங்கள் மிகுந்த ஆர்வத்தோடு இருந்து வருகிறோம். நாங்கள் நடத்திய போராட்டங்களிலும், நாங்கள் நடத்திய பத்திரிகையிலும்கூட, 2 தண்டவாளங்களைப்போல வன்னியர்களும், ஆதிதிராவிடர்களும் இருக்க வேண்டும் என்றுதான் சொல்லி இருக்கிறோம். அவர்களோடு ஒரு வன்மத்தை, ஒரு மோதலை உருவாக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு துளியளவும் விருப்பமில்லை. நாட்டில் ஜனநாயகம் வலுவாக இருக்க வேண்டும் என்று சொன்னால் எத்தனை சாதிகள் இருக்கின்றனவோ, அத்தனை சாதிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

ஒருங்கிணைந்து செயல்பட...

வன்னியர்களை அடக்கி அதிகாரத்தை கைப்பற்றுவோம் என்று சொன்னால் அது நடக்காது. இதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். மேல்பாதி கிராமத்தில் வன்னியர்கள் வசிக்கின்ற பகுதிக்கு 2 நாட்களாக குடிதண்ணீர் வரவில்லை. ரேஷன் கடை திறக்கப்படவில்லை. வன்னியர் சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டிடம் முறையிட்டிருக்கிறோம். அவர், நல்ல தீர்வு ஏற்படும் என்று சொல்லியிருக்கிறார். நாங்கள் யாருக்கும் அடிமையில்லை. அதே நேரத்தில் அனுசரித்து செல்லவும் தயாராக இருக்கிறோம். தமிழகத்தில் கலவரம் இல்லாத நிலைமை உருவாக எல்லோரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது பா.ம.க. மாவட்ட தலைவர்கள் தங்கஜோதி, புகழேந்தி, வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் அன்புமணி, பா.ம.க. மாவட்ட செயலாளர் பாலசக்தி, அமைப்பு செயலாளர்கள் பழனிவேல், மணிமாறன், ஒன்றிய செயலாளர் ஞானவேல், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் குமரகுருபரன், நகர செயலாளர்கள் பெருமாள், போஜராஜன், வக்கீல் சசிக்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story