அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்த அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார்.
தொகை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:-
மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப்பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட விண்ணப்பப்பதிவு முகாம் இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது. ரேஷன் கடை பணியாளர் ஒவ்வொரு கிராமத்திலும் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவற்றை வீட்டில் நேரடியாக வழங்கி வருகின்றனர்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் ரேஷன் கடை அமைந்திருக்கும் விண்ணப்பப் பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேற்காணும் பணிகள் தொடர்பாக முகாம் பொறுப்பு அலுவலர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.
அனைத்துத் துறை அலுவலர்களும் அவரவர்களுக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ள பணிகளை சரியாகவும், விரைந்தும் மற்றும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, வருவாய் கோட்டாட்சியர்கள் பானு, பிரேமலதா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயகுமார், ஊராட்சிகள் உதவி இயக்குன் விஜயகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு எச்சரிக்கை
கூட்டத்தில் பேசிய கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நான் ஆய்வுக்கு எப்போது எந்த பகுதிக்கு செல்கிறேன் என்பது யாருக்கும் தெரியாது. இதனால் தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர் யாரும் என்னுடன் வரவேண்டாம். ஆனால் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் அந்தந்த கிராமங்களில் இருக்க வேண்டும். நான் வரும்போது இல்லாமல் தாலுகா அலுவலகம் சென்று விட்டேன் என்று சொல்வதை ஏற்க முடியாது. தாசில்தாரிடம் உடனடியாக கேட்டு நீங்கள் அங்கு இல்லை என்று தகவல் வந்தால் வீடியோ கால் வரும்.
கிராம நிர்வாக அலுவலகத்தில் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும். தாலுகா அலுவலகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வரும்பொதுமக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என்றார்.