வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளன - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பருவமழையை எதிர்கொள்ள அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை கலைவாணர் அரங்கில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அனைத்து துறை அதிகாரிகளுடன் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில்,
அரசினுடைய பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டிருக்க கூடிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் அனைவரும் எடுத்து கூறியுள்ளீர்கள். அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருப்பதை அறிந்து நான் மனநிறைவு அடைகிறேன்.
கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் நாம் ஒரு பெருமழையை சந்தித்தோம். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நமக்கு பெரும் சவாலாகவே இருந்தது. மீண்டும் அதே போன்ற நிலை சென்னைக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்று, அப்போதே முடிவெடுத்து அதற்குறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டோம்.
இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக ஒரு குழுவை அமைத்து அக்குழு அளித்துள்ள ஆலோசனைகளின்படி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள், மற்றும் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்ககூடிய மாவட்டங்களில் எல்லாம் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் கண்டறிந்து அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வெள்ள பாதிப்பு அதிகமாகும் இடங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையின் முக்கிய நீர் ஆதாரங்களாக இருக்கக்கூடிய செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட ஏரிகளில் போதிய அளவு நீர் இருப்பு உள்ளதாக நான் அறிகிறேன். பருவமழையையொட்டி இந்த ஏரிகளை தொடர்ந்து கவனித்து அதை முறையாக கையாள வேண்டும். பருவமழையை எதிர்கொள்ள அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.