முத்துப்பேட்டை பேரூராட்சி அனைத்து பணியாளர்களும் வேலை நிறுத்தம்
டெண்டர் ஒத்தி வைக்கப்பட்டதால் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை கண்டித்து முத்துப்பேட்டை பேரூராட்சி அனைத்து பணியாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் பேரூராட்சி அலுவலகமும் மூடப்பட்டது.
முத்துப்பேட்டை:
டெண்டர் ஒத்தி வைக்கப்பட்டதால் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை கண்டித்து முத்துப்பேட்டை பேரூராட்சி அனைத்து பணியாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் பேரூராட்சி அலுவலகமும் மூடப்பட்டது.
குடிநீர் பிரச்சினை
முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் தினந்தோறும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் அன்றாடம் நடைபெறும் தூய்மை பணி, தெருவிளக்கு பராமரிப்பு பணிகள், அலுலக பணிகள் உள்பட அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சினைகளால் பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கும் மக்கள் மத்தியில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கவுன்சிலர்களுக்கும் அலுவலக பணியாளர்களுக்கும் அன்றாடம் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.
டெண்டர் ஒத்தி வைப்பு
இந்த நிலையில் பேரூராட்சியில் நேற்று முன்தினம் மின்சாரப் பொருட்கள், பிளம்பிங் பொருட்கள் டெண்டர் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் திடீரென்று அலுவலகப் பணியின் காரணமாக டெண்டர் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த கவுன்சிலர்கள் சிலர் பேரூராட்சி பணியாளர்களிடம் எப்படி டெண்டரை ஒத்தி வைக்கலாம் என்று கூறி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
வேலை நிறுத்தம்
இதனை கண்டித்து பேரூராட்சி பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர்.அதன்படி நேற்று காலை 61 தூய்மை பணியாளர்கள் உள்பட அனைத்து பணியாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணியாளர்கள் யாரும் பணிக்கு வராததால் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் மூடி கிடந்தது. மேலும் குப்பை சேகரிக்க பயன்படுத்தும் வாகனங்களும் அங்கேயே நிறுத்தப்பட்டிருந்தன. சாலை மற்றும் தெருக்களில் குப்பைகள் அல்லப்படாமல் தேங்கிக் கிடந்தது.