அனைத்து விரைவு ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை
சீர்காழியில் அனைத்து விரைவு ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
சீர்காழி:
சீர்காழியில் அனைத்து விரைவு ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
ரெயில்கள் நின்று செல்லவில்லை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரெயில் நிலையத்தில் கொரோனா பரவலுக்கு முன்னர் 24 ரெயில்கள் நின்று சென்றன. ஆனால் கொரோனா பரவல் குறைந்து ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்ட பின்னர், 17 ரெயில்கள் மட்டுமே சீர்காழி ரெயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. உழவன், ராமேசுவரம் உள்ளிட்ட 7 ரெயில்கள் நின்று செல்வதில்லை.
இதனால் சீர்காழி பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், வர்த்தகர்கள் உள்ளிட்டோர் மிகுத்த சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இந்த நிலையில் சீர்காழியில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.
அமைதி பேச்சுவார்த்தை
இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையத்திற்கு ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் செய்து ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக போராட்ட குழுவினர் அறிவித்தனர்.
இதுதொடர்பாக சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் அர்ச்சனா தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று நடந்தது. இதில் திருச்சி ரெயில்வே கோட்ட இயக்க மேலாளர் ஹரிகுமார், ரெயில்வே போலீசார் மற்றும் பலர் பங்கேற்றனர்.
உறுதி
கூட்டத்தில் பேசிய போராட்ட குழுவினர், 'சீர்காழி பகுதியானது ஆன்மிக தலங்கள் நிறைந்த பகுதியாகும். இந்த நிலையில் ரெயில்கள் நின்று செல்லாததால், வெளியூர் மக்கள் பஸ் போக்குவரத்தை பெரிதும் நம்பி இருக்க வேண்டி உள்ளது. சீர்காழி பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் ரெயில் போக்குவரத்து இன்றி சிரமப்படுகிறார்கள். எனவே சீர்காழியில் அனைத்து வகையான ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
பின்னர் பேசிய ரெயில்வே அதிகாரிகள், அந்த்யோதயா ரெயில் நிற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பல ரெயில்கள் நின்று செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து மே மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சீர்காழி ரெயில்வே நிலையத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.