தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து அரசுதிட்ட பணிகளையும்விரைந்து செயல்படுத்த வேண்டும்: அமைச்சர்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து அரசு திட்டப் பணிகளையும் முழுமையாக விரைந்து செயல்படுத்த அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் ஆகியோர் அரசு அலுவர்களுக்கு அறிவுறுத்தினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து அரசு திட்டப் பணிகளையும் முழுமையாக விரைந்து செயல்படுத்த அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் ஆகியோர் அரசு அலுவர்களுக்கு அறிவுறுத்தினர்.
ஆய்வு கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் அரசின் திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்ட அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினர். கூட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மூலம் 10 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகம், சுகாதாரத்துறையில் கருணை அடிப்படையில் 2 பேருக்கு பணிநியமன ஆணை, அயலகத்தமிழர் நலத்துறை சார்பில் குவைத் நாட்டில் காலமான கலீல் ரஹ்மான் என்பவரின் வாரிசுதாரருக்கு இழப்பீட்டுத் தொகை ரூ.15 லட்சத்து 95 ஆயிரத்து 159 ஆகியவை வழங்கப்பட்டன
அமைச்சர் கீதாஜீவன்
கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் கூறும் போது, தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவுப்படி, நமது மாவட்டத்தில் பல்வேறு அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எந்தவொரு பணியாக இருந்தாலும் ஆய்வு செய்தால் தான் அந்த பணி விரைவாக நடைபெறும். எனவே அரசின் திட்டங்களை விரைவுப்படுத்திடவும், அலுவலர்களை ஊக்கப்படுத்திடவும் ஆய்வுக்கூட்டம் நடக்கிறது. வளர்ச்சி திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும். தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அனைத்து திட்டங்களையும், அலுவலர்கள் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசும் போது, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மாநிலம் முழுவதும் ஒவ்வொரு பகுதியாக சென்று என்னென்ன பணிகள் எந்த அளவுக்கு நடைபெற்று உள்ளது என்பது குறித்து கள ஆய்வு செய்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் எந்தெந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது, என்பது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்திலும் அரசின் அனைத்து திட்ட பணிகளையும் விரைவாக செயல்படுத்தி முழுமையாக முடிக்க அனைத்து துறை அலுவலர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறினார்.
கூட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் பேசும் போது, தமிழ்நாடு முதல்-அமைச்சர் நமது மாவட்டத்ததுக்கு கள ஆய்வுக்கு வருவதற்கு முன்னதாக தயார்படுத்துவதற்கான ஒரு ஆய்வு கூட்டம் நடக்கிறது. மேலும் தலைமைச் செயலாளர், ஒவ்வொரு துறையிலும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், நடைமுறை பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்து உள்ளார். அனைத்து துறைகளிலும் திட்டங்களின் செயல்பாடுகளின் முன்னேற்றத்தை அதிகப்படுத்துவதற்கு இந்த கூட்டம் ஒரு வாய்ப்பாக அமைந்து உள்ளது' என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரேசுபம் ஞானதேவ் ராவ், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ச.தினேஷ்குமார், தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அ.பிரம்மசக்தி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.