அனைத்து தொலைதூர பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை
சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் அனைத்து தொலைதூர பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
சீர்காழி:
சீர்காழியை சுற்றிலும் முக்கிய வழிபாட்டுத் தலங்களான வைத்தீஸ்வரன் கோவில் (செவ்வாய்), திருவெண்காட்டில் புதன், கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் கேது, அண்ணன் பெருமாள் கோவில், நாங்கூர் பெருமாள் கோவில், சீர்காழி தாடாளன் பெருமாள் கோவில், பூம்புகார் சுற்றுலாத்தலம், பழையார் மீன்பிடி துறைமுகம், பூம்புகார் மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டு தலங்கள் மற்றும் சுற்றுலாத்தலங்கள்உள்ளன. மேலும் சீர்காழி பகுதியை சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் சென்னை, புதுச்சேரி, கடலூர், மதுரை, வேளாங்கண்ணி, தஞ்சை உள்ளிட்ட தொலைதூரங்களில் இருந்து இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் வராமல், மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சீர்காழி புறவழி சாலையிலேயே பகல் மற்றும் இரவு நேரங்களில் இறக்கி விட்டு செல்கின்றனர். இதனால் பயணிகள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் அனைத்தும் சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குகள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.