அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்


அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்
x
தினத்தந்தி 3 Jan 2023 12:15 AM IST (Updated: 3 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என குத்தாலம் ஒன்றியக்குழு கூட்டத்தில் தலைவர் கூறினார்.

மயிலாடுதுறை

குத்தாலம்:

நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என குத்தாலம் ஒன்றியக்குழு கூட்டத்தில் தலைவர் கூறினார்.

ஒன்றியக்குழு கூட்டம்

குத்தாலம் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் அவைக்கூடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி, துணை தலைவர் முருகப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தீர்மானங்களை உதவியாளர் திருநாவுக்கரசு வாசித்தார். கூட்டத்தில் 47 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் உறுப்பினர்களிடையே நடந்த விவாதம் வருமாறு:-

சாலைகளை சீரமைக்க வேண்டும்

ராஜவள்ளி (தி.மு.க.):- திருவாலங்காடு ஊராட்சி மாம்புள்ளி கிராமத்தில் புதிதாக ரேஷன் கடை கட்டி தர வேண்டும்.

சலீமா பானு(சுயே);- பெருமாள்கோவில், மேலையூர் ஊராட்சிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்.

ரமேஷ் (தி.மு.க.):- தத்தங்குடி ஊராட்சி வேலங்குடியில் சாலை அமைக்க வேண்டும். தத்தக்குடியில் பள்ளி அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்க வேண்டும்.

வினோத் (பா.ஜ.க.):- செம்பியன்கோமல் உக்கடைத்தெருவில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும்.

சுற்றுச்சுவர்

சிவகுமார் (பா.ம.க.):- இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அரசு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தும் நீர்வளத்துறை தவிர மற்ற துறை அதிகாரிகள் கலந்து கொள்ளாதது கண்டிக்கத்தக்கது. கோனேரிராஜபுரம் கால்நடை ஆஸ்பத்திரிக்கு சுற்றுச்சுவர் கட்டவேண்டும்.

செழியன் (அ.தி.மு.க.):- பாலையூர் வடக்கு தெருவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. உடனடியாக அந்த பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும்.

பாஸ்கரன் (அ.தி.மு.க.):- கீழ பெரம்பூரில் காருகுடி வாய்க்கால் ஆக்கிரமித்து மூடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

சத்யா (அ.தி.மு.க.):-கப்பூர் ஊராட்சியில் பாரதிதாசன் நகர், சிவன் கோவில் தெரு, கந்தமங்கலம் கீழ்த்தெரு ஆகிய பகுதிகளில் தார்ச்சாலை அமைக்க வேண்டும்.

ரேஷன்கடை

ராமதாஸ் (தி.மு.க.):- ஆலங்குடி ஊராட்சி முத்துக்குமரன் நகர், திருமணஞ்சேரியில் சாலைகள் அமைக்க வேண்டும்.

ராஜவள்ளி (தி.மு.க.):- திருவாலங்காடு மாம்புள்ளியில் ரேஷன் கடை அமைக்க வேண்டும்.

வசந்தகோகிலம் (தி.மு.க.):-அரிவளூர் ஊராட்சியில் தேவையான இடங்களில் சாலைகள் அமைக்க வேண்டும்.

புவனேஸ்வரி (தி.மு.க.):- கடக்கம் மேட்டுத்தெருவில் சாலை அமைக்க வேண்டும்.

ராஜா (தி.மு.க):- சேத்திரபாலபுரத்தில் டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்

மகேந்திரன்(தலைவர்):- அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கைகளும் பாரபட்சமின்றி நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

கூட்டத்தில் மேலாளர்கள் சாந்தி, சசிகுமார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story