தமிழகம் முழுவதும் 5 லட்சம் மூட்டை பழைய மஞ்சள் தேக்கம்
தமிழகம் முழுவதும், 5 லட்சம் மூட்டை பழைய மஞ்சள் தேக்கம் அடைந்து உள்ளதாக அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம் தெரிவித்து உள்ளார்.
தமிழகம் முழுவதும், 5 லட்சம் மூட்டை பழைய மஞ்சள் தேக்கம் அடைந்து உள்ளதாக அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம் தெரிவித்து உள்ளார்.
மஞ்சள் மாநகரம்
தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் அதிக அளவிலான மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் ஈரோடு மஞ்சள் மாநகரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் மஞ்சள் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடம், கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் விற்பனை கூடம் ஆகிய 4 இடங்களில் மஞ்சள் மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகிறது.
3,385 மூட்டைகள்
இங்கு தினமும் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரத்து 500 வரை மஞ்சள் மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இந்த நிலையில் நேற்று நடந்த மஞ்சள் மார்க்கெட்டுக்கு மொத்தம் 3 ஆயிரத்து 385 மஞ்சள் மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
இதில் விரலி மஞ்சள் ஒரு குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 429 முதல் ரூ.8 ஆயிரத்து 150 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.4 ஆயிரத்து 746 முதல் ரூ.7 ஆயிரத்து 159 வரையும் விற்பனை ஆனது. விவசாயிகள் கொண்டு வந்திருந்ததில் 1,980 மஞ்சள் மூட்டைகள் மட்டுமே ஏலம் போனது.
ரூ.600 விலை உயர்வு
இதுகுறித்து ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவரும், ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க முன்னாள் செயலாளருமான ராஜமாணிக்கம் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையின்போது ஈரோடு மார்க்கெட்டுகளில் மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.600 வரை விலை உயர்ந்தது. அதன் பின்னர் தற்போது வரை மஞ்சள் விலை உயரவில்லை. இதற்கு முக்கிய காரணம் தற்போது மார்க்கெட்டுக்கு பழைய மஞ்சள் மட்டுமே விற்பனைக்கு வருவது தான். 80 சதவீதம் முதல் 85 சதவீதம் பழைய மஞ்சளும், 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை புது மஞ்சளும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
தேக்கம்
பழைய மஞ்சளை மட்டும் தனியாக விற்பனை செய்ய முடியாது. புது மஞ்சளுடன் கலந்து தான் விற்பனை செய்ய முடியும். ஈரோடு மாவட்டத்தில் புது மஞ்சள் வரத்து குறைந்துள்ளதால் தற்போது மராட்டிய மாநிலத்தில் உள்ள புது மஞ்சளை நம்பித்தான் ஈரோடு மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள விவசாயிகள் புதுமஞ்சளை 90 சதவீதம் விற்பனை செய்து விட்டனர். ஆனால் பழைய மஞ்சள் அப்படியே இருப்பில் உள்ளது. கிட்டத்தட்ட தமிழகத்தில் 65 கிலோ எடை கொண்ட 5 லட்சம் மூட்டைகள் வரை பழைய மஞ்சள் தேக்கம் அடைந்துள்ளது. இந்த மஞ்சளை விற்பனை செய்ய வேண்டும் என்றால் புது மஞ்சள் வந்தால் மட்டுமே முடியும்.
12 லட்சம் மூட்டைகள்
ஈரோட்டில் உள்ள மஞ்சள் மார்க்கெட்டுக்கு வேலூர், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, ஆத்தூர், சேலம், கர்நாடகா மாநிலம் மைசூரு ஆகிய பகுதிகளில் இருந்து மஞ்சள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த மஞ்சள் டெல்லி, கொல்கத்தா, பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தமிழகத்தில் ஒரு ஆண்டிற்கு 8 லட்சம் முதல் 10 லட்சம் மூட்டைகள் வரை மஞ்சள் விளையும். இதில் 80 சதவீத மஞ்சள் ஈரோடு மாவட்டத்தில் விளைவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு தமிழகத்தில் கூடுதலாக மஞ்சள் பயிரிடப்பட்டு உள்ளதால் 10 லட்சம் முதல் 12 லட்சம் மூட்டைகள் வரை மஞ்சள் விளைய வாய்ப்பு உள்ளது. எனினும் மழை தொடர்ந்து பெய்தால் மஞ்சள் விளைச்சல் பாதிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.