ஆரணி நகரின் அனைத்து பகுதிகளுமே குப்பையாக உள்ளன நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் குற்றச்சாட்டு
ஆரணி நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளதால் நகரின் அனைத்து பகுதிகளுமே குப்பையாக உள்ளன என நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.
ஆரணி
ஆரணி நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளதால் நகரின் அனைத்து பகுதிகளுமே குப்பையாக உள்ளன என நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.
கூட்டம்
ஆரணி நகர்மன்ற சாதாரண கூட்டம் அதன் தலைவர் ஏ.சி.மணி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பாரி பி. பாபு முன்னிலை வகித்தார். ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வி வரவேற்றார்.
கூட்டம் தொடங்கியதும் அனைத்து உறுப்பினர்களுக்கும் நகர்மன்ற உறுப்பினருக்கான அடையாள அட்டைகளை தலைவர் ஏ.சி. மணி, ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வி, துணைத் தலைவர் பாரி பி.பாபு ஆகியோர் வழங்கினர்.
அதனை தொடர்ந்து ஆரணி நகராட்சிக்கு ரூ.6 கோடி செலவிலும், அறிவுசார் நூலகம் ரூ.2½ கோடியிலும், தொழிலாளர் குடியிருப்பு கட்டுவதற்கு ரூ.4 கோடியிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அனைத்து பகுதிகளுமே குப்பை
அதனை தொடர்ந்து உறுப்பினர்கள் கிருபசமுத்திரா, நவநீதம், அமுதா, கார்த்தி, ஏ.சி.பாபு உள்பட அனைத்து உறுப்பினர்களும் ''நகரின் அனைத்து பகுதிகளுமே குப்பை கூளங்களாக காட்சியளிக்கிறது. கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை. சிறிய மழை பெய்தாலும் சாலைகளில் மழைநீர் கழிவுநீருடன் வீடுகளுக்குள் புகும் நிலை இருந்து வருகிறது.துப்புரவு பணியாளர்கள் 2 பேர் மட்டுமே வருகிறார்கள் அதுவும் வயதானவர்கள். அவர்களை வைத்து பணி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே கூடுதல் பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என காரசாரமாக விவாதத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் கூறுகையில், தற்காலிகப் பணியாளர்கள் 116 பேர் உள்ளனர். அனைத்து பகுதிகளுக்கும் அவர்கள் பிரித்து அனுப்பப்படுகிறார்கள் என்றனர். உடனே தி.மு.க. உறுப்பினர் வி.ரவி தற்காலிக பணியாளர்கள் 1 முதல் 18 வார்டுகளுக்குத் தான் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஏன் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்புகிறீர்கள் என்று ஆவேசமாக கேட்டார். நிரந்தரப் பணியாளர்கள் 60 பேர் மட்டுமே பணியில் இருப்பதால் அந்த பகுதிகளுக்கும் தற்காலிக பணியாளர்கள் அனுப்பப்படுகிறார்கள் என அதிகாரிகள் கூறினர்.
சாலையோரம் பிணங்களை புதைக்கும் அவலம்
பின்னர் உறுப்பினர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-
தேவராஜ் (அ.தி.மு.க.)் ஆரணி வி.ஏ.கே. நகர் சாலையில் இருந்து ரகுநாதபுரம் செல்லும் சாலை ஓரமாகவே கடந்த சில தினங்களாக பிணங்களை புதைக்கும் நிலை இருந்து வருகிறது. அருகாமையில் நகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்கக் கூடிய நீரேற்று நிலையம் உள்ளது என்பதனை கருத்தில் கொண்டு இதை உடனடியாக மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.
முடிவில் பொறியாளர் டி.ராஜவிஜயகாமராஜ் நன்றி கூறினார்.