அனைத்து மக்களும் வழிபாடு நடத்த அனுமதி
சின்ன குன்னூர் ஹெத்தையம்மன் கோவிலில் அனைத்து மக்களும் வழிபாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
ஊட்டி
சின்ன குன்னூர் ஹெத்தையம்மன் கோவிலில் அனைத்து மக்களும் வழிபாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
106 மனுக்கள்
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் தங்களது மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர். பொதுமக்களிடம் இருந்து 106 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.
ஊட்டி அருகே சின்ன குன்னூர் பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் 380 கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர். இதில் பெரும்பாலான கிராமங்களில் குலதெய்வமான ஹெத்தையம்மன் வழிபாடு நீண்ட காலமாக நடந்து வருகிறது. இதில் சின்ன குன்னூர் உள்பட 16 கிராமங்கள் பழமை வாய்ந்த ஊர்களாகும். இதனால் பேரகணி, சின்ன குன்னூர் உள்ளிட்ட 7 ஊர்களில் ஒரே நாளில் ஹெத்தையம்மன் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும்.
அனுமதி வழங்க வேண்டும்
இந்த நிலையில் எங்கள் ஊரில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சில நபர்கள் மாவட்டம் நிர்வாகத்திற்கு புகார் அளித்தனர். இதனால் தற்போது கோவில் மாவட்ட நிர்வாகத்தால் மூடி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் வருகிற 2-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடைபெற உள்ள ஹெத்தையம்மன் பண்டிகைக்கு வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்படும்.
எனவே, சின்ன குன்னூர் ஹெத்தையம்மன் கோவிலில் அனைத்து தரப்பு மக்களும் குலதெய்வ வழிபாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
போக்குவரத்து நெரிசல்
ஆலட்டி கடநாடு பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் ஊரை சேர்ந்த தனிநபர்கள் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளனர். மேலும் அரசு பஸ் வந்து செல்லும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனபிரியா (பொது), மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.