தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் குளங்கள்


தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் குளங்கள்
x

தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் குளங்கள்

திருப்பூர்

அவினாசி

பல ஆண்டுகளாக பருவமழை சரிவர இல்லாததால் அவினாசி பகுதியில் உள்ள குளம் குட்டைகள் தண்ணீர் இன்றி வரண்டு கிடக்கிறது.

வறண்டு கிடக்கும் குளங்கள்

திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியத்தில் பெரும்பாலும் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பருவமழை காலங்களில் இப்பகுதியில் உள்ள அனைத்து குளம், குட்டைகளும் நிரம்பியிருக்கும். இதனால் விவசாயம் செழித்து வந்தது.

இந்த நிலையில் இப்பகுதியில் சரிவர பருவமழை பொய்த்துப்போனதால் நாளடைவில் தண்ணீர்வரத்து குறைந்து குளம், குட்டைகளுக்கு நீர் இன்றி போனது. தற்போது தமிழ்நாட்டில் பல பகுதிகளில் பருவமழை பெய்து குளம், குட்டை, ஏரிகள் நிரம்பி வருகிறது. ஆனால் அவினாசி மங்கலம் ரோட்டில் உள்ள 300 ஏக்கர் பரப்பளவுள்ளதாமரைக்குளம், ராயம்பாளையம் ரோட்டில் உள்ள 350 ஏக்கர் பரப்பளவு கொண்ட சங்க மாங்குளம் மற்றும் அவினாசி ஒன்றியத்திற்குட்பட்ட 31 ஊராட்சிகளில் உள்ள நூற்றுக்கணக்கான குளம், குட்டைகள், வறண்டு கிடக்கிறது. இதனால் விவசாயம் நலிவடைந்து வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

வேதனை அளிக்கிறது

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து குளம், குட்டைகளும் நிரம்பியதால் விவசாயம் செழித்து வந்தது. நாளடைவில் பருவமழை சரிவர இல்லாமல் பல வருடங்களாக பெரும்பாலான குளம், குட்டைகளில் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. இதனால் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்கள் நலிவடைந்து வருகிறது. விவசாயத்திற்கு அடிப்படை தேவை தண்ணீர். ஆனால் அது போதுமானதாக இல்லை.

பருவமழை காலத்திலும் தண்ணீர் இன்றி குளங்கள் காய்ந்து கிடப்பது வேதனை அளிக்கிறது. தற்போது விவசாயிகள் நம்பியிருப்பது அத்திக்கடவு திட்டம் மட்டும்தான். அந்த திட்டம் கூடிய விரைவில் செயல்பாட்டுக்கு வந்தால் மட்டுமே விவசாயம் புத்துயிர்பெறும் என்பதே எங்கள் விருப்பம். எனவே அரசு விரைந்து அத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Related Tags :
Next Story