அனைத்து சாலைகளும் விரைவில் சீரமைக்கப்பட்டு சிறந்த வார்டாக மாறும்; காங்கிரஸ் கவுன்சிலர் ஈ.பி.ரவி தகவல்


அனைத்து சாலைகளும் விரைவில் சீரமைக்கப்பட்டு சிறந்த வார்டாக மாறும்;  காங்கிரஸ் கவுன்சிலர் ஈ.பி.ரவி தகவல்
x

அனைத்து சாலைகளும் விரைவில் சீரமைக்கப்பட்டு சிறந்த வார்டாக மாறும் என்று காங்கிரஸ் கவுன்சிலர் ஈ.பி.ரவி கூறியுள்ளாா்.

ஈரோடு

ஈரோடு மாநகராட்சிக்கு முதன் முதலில் காவிரிக்குடிநீர் எடுக்கப்பட்ட இடம் வைராபாளையம். இங்கிருந்துதான் இன்றுவரை பழைய நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு கிராமமாக இருந்த காலத்திலேயே சற்று தொலைவில் உருவான பழைய கிராமங்கள் வைராபாளையம், கிருஷ்ணாபாளையம் கிராமங்கள். இந்த பகுதிகள் தற்போது ஈரோடு மாநகராட்சியின் மிக அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் ஒன்றாக விளங்குகின்றன.

16-வது வார்டு

ஈரோட்டில் மிகவும் பழமையான மற்றும் அதிக அளவிலான ஒர்க்‌ஷாப்புகள் இங்கு அமைந்திருக்கின்றன. லாரி ஒர்க்‌ஷாப் என்றால் ஈரோட்டில் அனைவரும் வைராபாளையத்தைதான் கை காட்டுகிறார்கள்.

தற்போது ஈரோடு மாநகராட்சியின் 16-வது வார்டுக்குள் இந்த பகுதிகள் உள்ளன. வைராபாளையம், கிருஷ்ணம்பாளையம் என்ற பழைய கிராமங்கள் வளர்ந்து நகரமயமாகி விட்டன. அத்துடன் இணைந்த பட்டேல் வீதி, ஜீவாநகர், ராஜகணபதி நகர், செங்கோட்டையா வீதி, நாட்ராயன் கோவில் வீதி, கல்யாணசுந்தரம் வீதி, சிந்தன் நகர் உள்ளிட்ட பகுதிகளும் 16-வது வார்டுக்குள் உள்ளன. சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றளவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்த வார்டில், சுமார் 6,500 ஓட்டுகள் உள்ளன.

இந்த ஓட்டுகளில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலராக தேர்வு பெற்றவர் ஈரோடு காங்கிரஸ் கட்சியின் மாநகர மாவட்ட முன்னாள் தலைவர் ஈ.பி.ரவி. இவர் ஏற்கனவே வீரப்பன்சத்திரம் 3-ம் நிலை நகராட்சியின் கவுன்சிலராகவும் பதவியில் இருந்திருக்கிறார். இப்போது ஈரோடு மாநகராட்சியின் 16-வது வார்டு கவுன்சிலராக இவரிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன?.

கே.குருசாமி

சிந்தன் நகர் 1-வது வீதியை சேர்ந்த கே.குருசாமி கூறியதாவது:-

சிந்தன் நகரில் 80 அல்லது 90 ஆண்டுகளுக்கும் மேலாக 12 குடும்பத்தினர் எந்தவித பட்டாவும் இல்லாமல் குடியிருந்து வருகிறார்கள். அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தற்போதைய கவுன்சிலர் ஈ.பி.ரவியிடம் வைத்தோம். அவர் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்ததுடன், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா-வையும் அழைத்து வந்து மக்களுக்காக கோரிக்கை வைத்து இருக்கிறார்.

எங்கள் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இருக்கிறார்கள். ஆனால் நவீன பொது கழிப்பிடம் இல்லை. இங்கு இருக்கும் கழிப்பிடமும் பல ஆண்டுகளாக உரிய பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. இந்த கழிப்பிடம் பராமரிப்பு செய்யப்படுவதுடன், கூடுதலாக கழிப்பிடங்கள் கட்டித்தரப்பட வேண்டும். காலிங்கராயன் வாய்க்காலை ஒட்டி எங்கள் குடியிருப்பு பகுதிகளில் உள்ளன. இங்கு படித்துறை இருக்கிறது. இங்கு உள்ள தொழிலாளர்கள் பெரும்பாலும் மாலை நேரத்துக்கு பிறகுதான் குளிக்க, துணி துவைக்க செல்வார்கள். அங்கு போதிய வெளிச்சம் இல்லாமல், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருந்தது. இதுகுறித்து கவுன்சிலர் ஈ.பி.ரவியிடம் கூறியதும் உடனடியாக படித்துறைகளில் மின் விளக்குகள் அமைத்து கொடுத்து இருக்கிறார். இங்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு 5 இடங்களில் தண்ணீர்தொட்டிகள் வைக்கப்பட்டன. பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்த இந்த தொட்டிகளை கவுன்சிலர் தனது சொந்த முயற்சியில் பழுதுநீக்கி, மக்கள் பயன்படுத்தும் நிலைக்கு மாற்றி உள்ளார். இங்கு புதிய தொட்டிகள் வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எம்.ஆர்.மாதேஸ்வரன்

கல்யாணசுந்தரம் நகர் பகுதியை சேர்ந்த எம்.ஆர்.மாதேஸ்வரன் கூறியதாவது:-

எங்கள் பகுதிகளில் பல ஆண்டுகளாக தெருவிளக்குகள் சரியாக எரிவது இல்லை. பட்டேல் நகரில் ஒரு சமுதாயக்கூடம் வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறோம். சாக்கடை கால்வாய்கள் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு சாக்கடைகள் தேங்கி, துர்நாற்றம் வீசியது. குடிநீர் இணைப்புகள் சரியாக வழங்கப்படாத நிலையும் இருந்தது. இந்த பிரச்சினைகள் குறித்து கவுன்சிலர் ஈ.பி.ரவியிடம் கூறினோம். சில நாட்களிலேயே ஒவ்வொரு பிரச்சினைக்கு தீர்வு கண்டு வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

எம்.பாலன்

ஜீவாநகர் முதல் வீதியை சேர்ந்த எம்.பாலன் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் சாக்கடைகள் தூர்வாரப்படாமல் பல ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டதால், பெருச்சாளிகள் குழி தோண்டி வீடுகளுக்குள் வந்து விட்டன. பொது கழிப்பிட வசதி இல்லாததால், இன்னும் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலமும் உள்ளது. சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. இவற்றை சரி செய்ய வேண்டும் என்று கவுன்சிலரிடம் கோரிக்கை வைத்தோம். உடனடியாக சாக்கடைகள் தூய்மைப்படுத்தப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

பெண்கள்

ராஜகணபதி நகர் பகுதியை சேர்ந்த பெண்கள் ராதா, சத்யா, சகுந்தலா ஆகியோர் கூறியதாவது:-

இங்கு சாதாரண கூலி வேலை செய்யும் மக்கள்தான் இருக்கிறோம். பெரும்பாலானவர்கள் வாடகை வீடுகளில் உள்ளோம். புதிய கவுன்சிலர் ஈ.பி.ரவி, எங்கள் பகுதிக்கு அடிக்கடி வருகிறார். எப்போது நாங்கள் தொடர்பு கொண்டாலும் எங்கள் பிரச்சினைகளை காதுகொடுத்து கேட்கிறார். அவர் ஊரில் இல்லை என்றாலும் இன்னொருவரை நியமித்து எங்கள் பிரச்சினையை கேட்டு, அதிகாரிகள் மூலம் நிவர்த்தி செய்கிறார்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

முன்னாள் கவுன்சிலர்

ஜீவாநகர் பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் குணா என்கிற குணசேகரன் கூறியதாவது:-

மக்கள் குறைகளே நேரில் கேட்டு உடனடியாக பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் கவுன்சிலராக ஈ.பி.ரவி இருக்கிறார். மக்களிடம் எளிமையாக இருக்கிறார். எளிதில் அணுகக்கூடியவராக, மக்களின் கேள்விகளை அசட்டை செய்யாமல் அவற்றை கேட்டு தீர்வு காணுபவராக இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாற்றுக்கட்சிகளை சேர்ந்த சிலர் கூறும்போது, பதவியின் மோகத்தில் மக்களை பார்ப்பவர்கள் மத்தியில், மக்களோடு மக்களாக இருந்து மக்களின் பிரச்சினைகளை அணுகுகிறார். அவரது சாதனை என்று பார்த்தால், கடந்த ஆண்டு, மக்கள் நடமாட முடியாத பல பகுதிகள் இன்று தூய்மையாகவும் சுகாதாரமுமாக இருக்கின்றன என்பதே.

கோரிக்கை

ஒரு ஸ்கூட்டரில் கவுன்சிலர் ஈ.பி.ரவி, வீதிகளை சுற்றி வரும்போது, அவரை பார்த்த அனைவரும் வணக்கம் தெரிவித்து நலம் விசாரிக்கிறார்கள். அவரும், வண்டியை நிறுத்தி அவர்களிடம் பேசுகிறார்.

பட்டேல் நகரில் அவர் சென்றதும், எப்போது சமுதாயக்கூடம் கட்டுவீர்கள் என்கிறார்கள். அவர் அங்கு ஒரு இடத்துக்கு அழைத்துச்சென்று இந்த இடத்தை தேர்வு செய்து இருக்கிறோம். விரைவில் பணி நடைபெறும் என்று கூற, எங்கள் வீதியில் தண்ணீர் பஞ்சம் இல்லாத அளவுக்கு குழாய் போட்டு கொடுத்து விட்டீர்கள்.

கழிவுநீர் உந்து நிலையம்

பின்னர் காங்கிரஸ் கவுன்சிலர் ஈ.பி.ரவி கூறியதாவது:-

எனது வார்டு அதிக மக்கள் அடர்த்தியும், வீடுகள் அடர்த்தியுமாக உள்ள பகுதி ஆகும். இங்கு புதிதாக வளர்ச்சித்திட்டங்கள் எதுவும் செய்ய முடியாது. பொதுமக்கள் பொழுதுபோக்க பூங்கா அமைக்கக்கூட இடம் இல்லை. எனவே சாலைகளையே அழகானவையாக மாற்ற திட்டமுள்ளது. பாதாள சாக்கடை திட்டத்துக்கான கழிவுநீர் உந்து நிலையம் அமைக்க இங்கு பெருத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனால் பல ஆண்டுகளாக இங்கு பணி நடைபெறவில்லை. நான் கவுன்சிலராக பொறுப்பு ஏற்றதும், மக்களிடம் நீருந்து நிலையத்தின் அவசியத்தை எடுத்துக்கூறி, அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்று உறுதி அளித்தேன் என் மீதான நம்பிக்கையில் மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இப்போது பணிகள் வேகமாக நடந்துவருகிறது. 6 மாதத்தில் பணிகள் நிறைவடையும். தொடர்ந்து அனைத்து வீடுகளுக்கும் பாதாள சாக்கடை இணைப்பு சரியாக வழங்கப்பட்டு, பணிகள் தொடங்கும். பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிந்ததும் அனைத்து சாலைகளும் புதுப்பிக்கப்பட்டு சிறந்த வார்டாக மாறும்.

ரேஷன்கடை-உடற்பயிற்சி கூடம்

எனது வார்டில் புதிதாக சிந்தன் நகரில் ரேஷன் கடை கட்டப்படும். ஜீவாநகரில் உடற்பயிற்சிக்கூடம் கட்டப்பட உள்ளது. பட்டேல் நகரில் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. நிதி உதவியில் ரூ.50 லட்சம் செலவில் சமுதாயக்கூடம் விரைவில் கட்டப்படும். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் எனது வார்டு முழுமை பெற்ற வார்டாக மாறும்.

சிந்தன் நகரில் 12 குடும்பத்தினருக்கு பட்டா விரைவில் வழங்கப்படும். மக்களுக்காக நல்ல திட்டங்கள் விரைவாக கிடைக்கதொடர்ந்து உழைப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story