7 ஊராட்சிகளில் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 7 ஊராட்சிகளில் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அம்ரித் அறிவுறுத்தினார்.
ஊட்டி,
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 7 ஊராட்சிகளில் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அம்ரித் அறிவுறுத்தினார்.
ஆலோசனை கூட்டம்
நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர்போஸ்டில் உள்ள கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பேசியதாவது:- கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 2021-2022-ம் ஆண்டு 11 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டது.
தோட்டக்கலைத்துறை மூலம் வீட்டு தோட்டம் அமைக்க காய்கறி விதை தளைகள், இயற்கை வேளாண்மைக்கான இடுபொருட்கள், வரப்பு ஓரங்களில் பலன்தரும் பழக்கன்றுகள் மற்றும் மரக்கன்றுகள், கைத்தெளிப்பான்கள், விசை தெளிப்பான்கள் என 2,184 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
7 ஊராட்சிகள் தேர்வு
2022-2023-ம் ஆண்டு உல்லத்தி, தொட்டபெட்டா, எப்பநாடு, பர்லியார், தெங்குமரஹாடா, ஜக்கனாரை, நெலாக்கோட்டை ஆகிய 7 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் அனைத்து துறைகளின் திட்டங்களையும் ஒருங்கிணைந்து செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேற்கண்ட கிராமங்களில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களுக்கான செயல்முறை திட்டம் தயார் செய்ய வேண்டும்.
அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பயிற்சிகள், முகாம்கள் போன்ற அனைத்தையும் திட்ட கிராமங்களில் தன்னிறைவு அடையும் வகையில் செயல்படுத்த வேண்டும். தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்படும் அனைத்து திட்டங்களிலும் 80 சதவீதம் 7 கிராம ஊராட்சிகளில் வழங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டும்
வருகிற 2-ந் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகளில் பிரதம மந்திரியின் ஊக்கத்தொகை திட்டம் மற்றும் பிரதம மந்திரியின் உழவர் கடன் அட்டை போன்ற திட்டங்களில் இதுவரை பயன்பெறாத தகுதி வாய்ந்த புதிய பயனாளிகளை கண்டறிந்து விண்ணப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், மகளிர் திட்ட அலுவலர் ஜாகீர் உசேன், தோட்டக்கலை இணை இயக்குநர் (பொறுப்பு) ஷில்பா மேரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.