அனைத்து பள்ளி வாகனங்களும் தணிக்கை செய்ய வேண்டும்


அனைத்து பள்ளி வாகனங்களும் தணிக்கை செய்ய வேண்டும்
x

அனைத்து பள்ளி வாகனங்களும் வருகிற 31-ந் தேதிக்குள் தணிக்கை செய்யப்பட்டிருக்க வேண்டும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசினார்.

வேலூர்

அனைத்து பள்ளி வாகனங்களும் வருகிற 31-ந் தேதிக்குள் தணிக்கை செய்யப்பட்டிருக்க வேண்டும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசினார்.

பள்ளி வாகனங்கள் ஆய்வு

வேலூர் வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் வேலூரில் உள்ள 40 பள்ளிகளில் இயக்கப்படும் 386 பஸ்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்களை ஆய்வு செய்யும் பணி காட்பாடி சன்பீம் பள்ளியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) ஆர்.வெங்கடேசன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது:-

வாகனங்களை விபத்து இல்லாமல் எப்படி இயக்க வேண்டும் என டிரைவர்களுக்கு அரசு அறிவுரை வழங்கி வருகிறது. இங்கே தற்போது 261 வாகனங்கள் ஆய்வு செய்ய கொண்டு வரப்பட்டுள்ளது. மற்ற வாகனங்களை ஒரு வாரத்திற்குள் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.

31-ந் தேதிக்குள்

வருகிற 31-ந் தேதிக்குள் அனைத்து பள்ளி வாகனங்களும் தணிக்கை செய்யப்பட்டு இருக்க வேண்டும். அதனை வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் உறுதி செய்ய வேண்டும். எந்த சூழ்நிலையிலும் டிரைவர்கள் வாகனங்களை இயக்கும் போது அவசரம் காட்டக்கூடாது. சிறு அசம்பாவித சம்பவம் நடந்தால் கூட அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

வேலூர் மாவட்டத்தில் 6 வழி சாலை உள்ளது. இதனால் ஏதாவது ஒரு வாகனம் மூன்று நாட்களுக்கு ஒரு முறை விபத்துக்கு உள்ளாகிறது.

செல்போன் பேசிக்கொண்டு...

கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது, அடுத்தவர் வரும் பாதையில் திடீரென நுழைந்து செல்வது போன்ற செயல்களால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

இவ்வாறு விதிகளை மீறி செல்பவர்களின் வாகனங்களின் எண்கள் குறிக்கப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பள்ளி வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள் கவனமாக இருக்க வேண்டும். விதிமுறைகளை மீறி வாகனத்தை ஓட்டக்கூடாது. வாகனங்களை வேகமாக இயக்கக் கூடாது. தினமும் நீங்கள் வாகனம் எடுப்பதற்கு முன் வாகனங்களை ஒரு முறை சரி பார்க்க வேண்டும்.

இவர் அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி பேசினார். சன்பீம் பள்ளிகளின் தலைவர் ஹரிகோபாலன், காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, தாசில்தார் ஜெகதீஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நேற்று நடந்த ஆய்வில் 23 பள்ளி வாகனங்களின் குறைபாடுகளை சரி செய்ய அதிகாரிகள் கூறினர். முடிவில் மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் நன்றி கூறினார்.


Next Story