தூத்துக்குடியில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநாடு


தூத்துக்குடியில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநாடு
x

தூத்துக்குடியில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநாடு நடந்தது.

தூத்துக்குடி

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநாடு

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க 4-வது மாநாடு தூத்துக்குடி அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் வைத்து நேற்று நடந்தது. மாநாட்டுக்கு சங்க மாவட்டத் தலைவர் செ.கருணாகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் பி.அல்போன்ஸ் லிகோரி, ம.சாந்தகுமார், பொன். பரமானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைப் பொதுச்செயலாளர் ந.வெங்கடேசன் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி வேலை அறிக்கையையும், மாவட்ட பொருளாளர் பி.திரவியம் வரவு செலவு அறிக்கையையும் தாக்கல் செய்தனர். மாநாட்டு தீர்மானங்களை மாவட்ட இணைச் செயலாளர்கள் மி.டெரன்ஸ், கு.ஜெயபால், ஞா.கலைஅரசன் ஆகியோர் முன்மொழிந்தனர். சங்க மாநில துணைத் தலைவர் பி.சுகுமாரன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.

தீர்மானங்கள்

மாநாட்டில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும். 70 வயது முதிர்ந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். காப்பீடு திட்ட குறைபாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் தூத்துக்குடி மாவட்ட கருவூல அலுவலர் சேரந்தையன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தே.முருகன், சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் இரா.பேச்சிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் வெ.முருகன் நன்றி கூறினார்.


Next Story